தொலைதூர கல்வி இயக்கக வருவாய் கடும் பாதிப்பு ஆளுநர் அரசியலால் நிதி நெருக்கடியில் தவிக்கும் நெல்லை பல்கலைக்கழகம்: பட்டமளிப்பு விழா நடத்தாததால் சான்றிதழ் கேட்டு நீதிமன்றத்தை நாடும் மாணவர்கள்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தொலைதூர கல்வி இயக்கக வருவாய் கடும் பாதிப்பு மற்றும் ஆளுநர் அரசியலால் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பட்டமளிப்பு விழா நடத்தாததால் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். தென்மாவட்ட மாணவர்களின் உயர்கல்வி நலனை கருத்தில் கொண்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை அருகே அபிஷேகப்பட்டியில் 550 ஏக்கர் பரப்பில் தொடங்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், மொழி, பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் கீழ் 24 துறைகள் இயங்கி வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 102 அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில், கோவிந்தபேரி, நாகம்பட்டி, திசையன்விளை, பணகுடி, புளியங்குடி உள்ளிட்ட இடங்களில் மனோ கல்லூரிகளும் இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. நாகலாபுரம், கன்னியாகுமரி, கடையநல்லூரில் பல்கலையின் உறுப்பு கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

நெல்லையை மையமாக கொண்டு 4 மாவட்டங்களில் கிளை பரப்பியுள்ள நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி என்பது ஒருகாலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வந்தது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட நெல்லை பல்கலையின் தொலைதூர கல்வி மூலம் பட்டங்களை பெற்று வந்தனர். பல்கலைக்கழக மானியக்குழு உதவியோடு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், இதழியல், மக்கள் தகவல் தொடர்பியல், வணிகவியல் என பல படிப்புகளை வெளியிடங்களில் இருந்து மாணவர்கள் தொலை தொடர்பு கல்வி மூலம் பயன்பெற்று வந்தனர்.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு தொலைதூர கல்வி இயக்ககம் மற்றும் பி.எச்டி ஆய்வின் மூலமாக கணிசமான வருவாய் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் முற்றிலுமாக குறைந்து விட்டது. தொலைதூர கல்வி இயக்ககத்தின் கீழ் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சான்றிதழ் வழங்காததது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. தொலை தூர கல்வி பயிலும் பல மாணவர்கள் தங்களுக்கு சான்றிதழ் கேட்டு நீதிமன்றத்தை சமீபகாலமாக நாடத் தொடங்கியுள்ளனர். பிஎச்டி ஆய்வு மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானிய விதிகளுக்கு புறம்பாக பல்வேறு சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டதால், ஆய்வு மாணவர்கள் மற்ற பல்கலைக்கழகத்திற்கு செல்வது வாடிக்கையாகி வருகிறது.

இதனால் நெல்லை பல்கலைக்கழகத்திற்கான வருவாய் முற்றிலும் குறைந்துள்ளது. ஆய்வு இதழ்களில் குளறுபடிகள், டாக்டர் பட்ட உறுப்பினர்களின் காலதாமதம் காரணமாக ஆய்வேடுகளை சமர்ப்பித்த மாணவர்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர். பல்கலைக் கழகத்தை மாணவர்கள் தொடர்ச்சியாக அணுகினாலும், ஆய்வுத்துறை சார்ந்தவர்கள் உரிய பதில் கூறுவதில்லை. இவற்றை சரி செய்தால் நெல்லை பல்கலைக் கழகத்திற்கு வருமானம் மென்மேலும் அதிகரிப்பதோடு, மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படாமல் இருக்கும். இதற்கான நடவடிக்கைகளை நெல்லை பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என ஆய்வு மாணவர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து ஆய்வு மாணவர்கள் கூறுகையில், ‘‘நெல்லை பல்கலைக்கழகத்தில் தற்போது ஆய்வு பட்டங்களை பெறுவதும், தொலை தூர கல்வியில் சான்றிதழ்கள் பெறுவதும் சிரமமான ஒன்றாக உள்ளது. கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்கலையின் பட்டமளிப்பு விழாக்கள் கூட நடப்பதில்லை. தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல் காரணமாக நெல்லை பல்கலைக்கழகம் தவிப்பில் உள்ளது. ஆசிரியர் மற்றும் பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தணிக்கை செய்தது போன்று பல்கலைக் கழகத்திலும் கடந்த 10 ஆண்டுகளில் நிதியினை உரிய முறையில் பயன்படுத்தினார்களா என்பது குறித்து தணிக்கை செய்திட வேண்டும்’’ என்றனர்.

The post தொலைதூர கல்வி இயக்கக வருவாய் கடும் பாதிப்பு ஆளுநர் அரசியலால் நிதி நெருக்கடியில் தவிக்கும் நெல்லை பல்கலைக்கழகம்: பட்டமளிப்பு விழா நடத்தாததால் சான்றிதழ் கேட்டு நீதிமன்றத்தை நாடும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: