3 மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்து விவகாரம் ஒன்றிய அமைச்சரிடம் நேரில் விளக்கமளிப்போம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சேந்தமங்கலம்: ‘தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்து அறிவிப்பு தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் விளக்கமளிப்போம்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை எல்லைக்கிராய்ப்பட்டியில் ஹீமோகுளோபினோபதி நோய் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் ரூ.40 கோடியில் உயிர் காக்கும் உயர் ரக மருந்துகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது சம்பந்தமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு டெல்லி சென்று அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விளக்கக் கடிதம் கொடுக்க உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் 40 மருத்துவக் கல்லூரிகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சில உள் கட்டமைப்பு வசதிகளை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும். முதல்வர் வந்த பிறகு அவரிடம் ஆலோசனை நடத்தி நானே டெல்லி சென்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளேன்.

2025ம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத தமிழ்நாடு உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வேலூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து சிறுமி இறந்து சடலத்தை தூக்கிச் சென்ற சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஒரு துணை சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அந்த கிராமத்திற்கு சாலை அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் பாம்பு கடி, நாய் கடி மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வனப்பகுதியில் 20 கி.மீ., நடந்து கட்டிட ஆய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று முன்தினம் 17 கிலோமீட்டர் நடந்து சென்று புதுவளவு, இலக்கியம்பட்டி நல வாழ்வு மையங்களை ஆய்வு செய்தார். நேற்று அதிகாலை நடை பயிற்சி தொடங்கிய அமைச்சர் 20 கிலோமீட்டர் தொலைவில் குழிவளவு என்ற வனப்பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவைக்காக கட்டிய கட்டிடத்தை நடந்து சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post 3 மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்து விவகாரம் ஒன்றிய அமைச்சரிடம் நேரில் விளக்கமளிப்போம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: