அமைதி திரும்புமா?

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் பற்றி எரிகிறது. கிட்டத்தட்ட ஒருமாதமாக அங்கு நீடிக்கும் கலவரம் இன்று வரை முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போது தான் அங்கு சென்று இருக்கிறார். அவர் அங்கு சென்ற பின்னரும் படுகொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி வழக்கம் போல் மணிப்பூர் பற்றி வாய் திறக்க மறுக்கிறார். மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தீஸ் இன மக்களுக்கு பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தான் மலைவாழ் பழங்குடி இன மக்களான நாகா, குக்கி இனத்தவர் போராட்டத்தை தொடங்கினர்.

பதிலுக்கு மெய்தீஸ் இன மக்களும் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் தான் இப்போது இவ்வளவு பெரிய கலவரமாக மாறி இருக்கிறது. 100க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். அமைதியை ஏற்படுத்த ராணுவம், துணை ராணுவ வீரர்கள் என 10 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்டர்நெட் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் தினமும் குறைந்தது 10 பேர் வரை கொல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஏராளமான வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்படுகின்றன.

மணிப்பூரில் பா.ஜ ஆட்சி தான் நடக்கிறது. முதல்வராக பிரேன்சிங் உள்ளார். அமித்ஷா வருகையை முன்னிட்டு 40 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று விட்டதாக அறிவித்தார். மேலும் பயங்கர ஆயுதங்களுடன் 25 பேரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கலவரம் அடங்கவில்லை. கடந்த மாதம் 3ம் தேதியே இந்த கலவரம் தீப்பற்றி விட்டது. அப்போது கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் மும்முரமாக இருந்தார். இதை பயன்படுத்திக்கொண்ட வன்முறையாளர்கள் தொடர்ந்து பலரை கொன்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

கர்நாடகா தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா உள்ளிட்ட முக்கியமான வேலைகள் முடிந்த பிறகு இப்போது 4 நாள் சுற்றுப்பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார் அமித்ஷா. இப்போது மணிப்பூர் உச்ச கட்ட பதற்றத்தில் உள்ளது. ராணுவ தளபதி மணீஷ்பாண்டேவும் அங்கு சென்று இருக்கிறார். பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறியாத நடவடிக்கையால் இப்போது மணிப்பூர் கலவரம் கட்டுக்கடங்காமல் பரவி நிற்கிறது. அங்கிருந்து முழுமையான தகவல்கள் கூட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு வருவதில்லை. ஏராளமான தமிழ் மக்கள் அங்கு வசிக்கிறார்கள்.

கலவரம் நடந்த பெரும்பாலான பகுதிகள் தமிழ் மக்கள் வசித்த பகுதிகள். எத்தனை பேர் இதில் பலியானார்கள், எத்தனை பேர் வீடு, கடை உள்ளிட்ட உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழ் மக்கள் மட்டுமல்ல, இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் பரிதாபத்திற்கு உரியவர்கள் தான். மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரையும் பாதுகாக்க வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமை. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். ஏராளமான மக்கள் உயிருக்கு பயந்து அசாம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள். 20 ஆயிரம் பேர் இன்னும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதமாக அவர்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்களை மறுகுடியமர்த்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்ப வழிவகை செய்ய வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

The post அமைதி திரும்புமா? appeared first on Dinakaran.

Related Stories: