‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மத்திய அரசு தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பினை நடத்துகின்றன. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று‌ முன்தினம் துவக்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: விரிவான நான் முதல்வன் திட்டத்தை, கடந்த 2022 மார்ச் 1 அன்று தமிழ்நாடு முதல்வர் அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டு மாணவர் ஒருவர் உலகின் எந்த நாட்டு மாணவர்களையும் விட தரமும் தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதை காட்டும் திட்டம் தான் ‘நான் முதல்வன்’ திட்டம். இதில், மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்த உடனே அவர்களுக்கு வழிகாட்டுதல் துவங்கி விடுகிறது.

12ம் வகுப்பு முடித்த உடனே கல்லூரியில் சேர்வதற்கான வழிகாட்டுதல் நம் மாவட்டத்தில் வழங்கப்பட்டது என்பதை அறிவீர்கள். நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் இருந்து அறிவிப்புகளை பெற்று, அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கி, தலைமை ஆசிரியர் மூலமாக பள்ளிகளில் ஒரு வழிகாட்டி ஆசிரியரை நியமித்து, அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். எந்தெந்த கல்லூரிகளில் சேரலாம்? எவ்வாறு விண்ணப்பிக்கலாம்? எந்தெந்த படிப்புகளில் சேர்ந்தால் வேலைவாய்ப்புகளை பெறலாம்? என்பதெல்லாம் ஏற்கனவே உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

கல்வி வாழ்க்கையை வளப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். கல்வி பெற்றவர்கள் சமூகத்திற்கு பொறுப்புள்ளவர்களாகவும், தன் உழைப்பால் உயர்ந்தவர்களாகவும், நாட்டை உயர்த்துபவர்களாகவும் இருக்க வேண்டும். வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்ப முறைகளுக்கு ஏற்ப மிகப்பெரிய சவால்கள் ஏற்பட்டுள்ளன. அந்த சவால்களை சமாளிக்கும் வகையில் கல்வி முறையில் மாற்றங்களும் படிப்புகளில் புதுப்புது வகைகளும், துறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத நிலையில் தற்போது கல்வி கற்பதிலும், கல்வியை வழங்குவதிலும் புதிய முறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களாகிய நீங்கள் எந்த படிப்பில் சேர்ந்துள்ளீர்களோ, அதில் புலமை பெற வேண்டும். வெறுமனே ஒரு பட்டப்படிப்பு படித்து விட்டால் வேலை கிடைத்துவிடும் என்று இருந்து விட வேண்டாம்.

நாம் படிக்கும் படிப்பு நமக்கு தகுந்த வேலை வாய்ப்பை அல்லது சுய வேலை வாய்ப்பை அல்லது தொழில் முனைவோர் என்ற நிலையை தரக்கூடியதாக இருக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பெற்றோர் பங்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல கல்லூரிகளின் பங்கும் முக்கியமான ஒன்றாகும். மாணவர்களுக்கு வேலை சார்ந்த வழிகாட்ட தற்போது தமிழ்நாடு அரசினுடைய ஆணைக்கிணங்க செங்கல்பட்டு கலெக்டரான எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் போட்டி தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அந்தப் போட்டி தேர்வுகள் எழுதுவதற்கான பயிற்சிகளை வழங்குவது குறித்தும், வழிகாட்ட தயாராக இருக்கிறது.

குறிப்பாக, தமிழ்நாடு அரசின் வேலை பெறுவதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதி கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் முதல் குரூப் ஒன் அலுவலர் வரையில் பல்வேறு நிலைகளில் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும், தமிழ்நாடு அரசின் சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதி காவல், தீயணைப்பு துறையிலும் பல வேலை வாய்ப்பு பெறலாம். மத்திய அரசினுடைய ரயில்வே துறையில் தேர்வுகளை எழுதி பல்வேறு நிலைகளில் பதவிகளை முடியும். பாதுகாப்பு துறையில் ராணுவம், கடற்படை மற்றும் விமானபடை போன்ற மூன்று வகையிலும் பல்வேறு வேலைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதி இளநிலை உதவியாளர் பல்வேறு பதவிகளை பெற முடியும். அரசு பள்ளிகளில் பயின்றவர்கள் கூட மத்திய அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி கலெக்டராக வர முடியும் என்பதற்கு நானே ஒரு உதாரணம். மாணவர்கள் சரியாக திட்டமிட்டு படியுங்கள். தேர்வுகளை சிறந்த முறையில் எழுதுங்கள். சிறந்த முறையில் தேர்ச்சி பெறுங்கள்.

எங்கெங்கெல்லாம் வேலை வாய்ப்பு உள்ளனவோ, அதற்குரிய முயற்சி மேற்கொண்டு உரிய தேர்வுகளை எழுதி, நல்லதொரு வேலை வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள். நீங்கள் முன்னேறுங்கள்! உங்களுடைய பெற்றோருக்கு மகிழ்ச்சியை தாருங்கள்! அனைவரும் சேர்ந்து இந்த நாட்டை உயர்த்த முயல்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தனசேகரன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் ராஜா, கல்லூரி முதல்வர் சிதம்பரம் வினாயகம், டைம் இன்ஸ்டிடியூட் நிறுவனர் மொகமத் கொஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: