வெறிச்சோடிய மெரினா..! திடீரென சென்னையைச் சூழ்ந்த இருள்: மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இருள் கவிந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 25 நாட்களாக வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் பல பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசத் தொடங்கியது. காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்திருப்பதால் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தியாகராயர் நகரில் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன. மெரினாவில் கருமேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த காற்று காரணமாக மெரினா கடற்கரையில் கடும் புழுதி வீசுவதால் மக்கள் வெளியேறினர். அனலைத் தணிக்க வரும் மக்களால் நிரம்பியிருக்கும் மெரினா கடற்கரை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. கடற்கரையே தெரியாத அளவுக்கு புழுதிக்காற்றுடன் மணல் பறந்து வருவதால் மக்கள் வெளியேறி வெறிச்சோடியது மெரினா.

பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் புழுதி வீசுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post வெறிச்சோடிய மெரினா..! திடீரென சென்னையைச் சூழ்ந்த இருள்: மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: