நம் உணவுப் பழக்கத்தாலும், நேரம் தவறி சாப்பிடுவதாலும் ஏற்படும் சின்ன மாற்றங்கள் சில சமயங்களில் பெரும் விளைவை ஏற்படுத்தும். இதை அறியாமல், நாம் அனைவரும் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். உணவே மருந்து என்னும் பழமொழியை மறந்து, ஆரோக்கியமானதை தவிர்த்து, துரித உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவையே அதிகம் விரும்புகிறோம்.
இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அதிலும் குறிப்பாக ெபண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். PCOS பிரச்னை சில காலமாக பெண்களின் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் இதனை பற்றிய எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பதே வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. ‘காலை எழுந்தவுடன் படிப்பு பின் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமாலை முழுவதும் விளையாட்டுஎன்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா…’ என்று அப்போதே பாரதி பெண் குழந்தைகளுக்கு தன் பாட்டால் அறிவுரை சொல்லி இருக்கிறார். இதை சரியாக கடைபிடிச்சா, PCOS மட்டுமில்ல, மற்ற நோய்களின் பாதிப்பில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்’’ என்கிறார் உட்சுரப்பியல் நிபுணரான டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன். PCOS என்றால் என்ன..? அதனால் ஏற்படும் விளைவுகள், அவற்றை தவிர்க்கும் முறைகள் குறித்து விளக்கமளிக்கிறார்.
‘‘ஒன்றுக்கும் மேற்பட்ட நீர் கட்டிகள் பெண்களின் கருமுட்டைப்பையில் உருவாகும் நிலைக்கு பாலிசிஸ்டிக் ஓவெரியன் சிண்ட்ரோம் (PCOS) என சொல்லுவோம். இப்போது இருக்கும் பெண்களிடையே அதிகமா காணப்படும் ஒரு நோய். இது பொதுவாக மரபணு காரணத்தால் ஏற்படும். அதாவது அம்மாவிற்கு இருந்தால் பெண் குழந்தையும் பாதிக்கும். அதுமட்டுமில்லாமல் உடல் பருமன் காரணமாகவும் பெண்களுக்கு PCOS வர வாய்ப்புகள் அதிகம். சில சமயங்களில் உடல் பருமனா இருக்கும் பெண்களுக்கு, மரபணு மூலம் தாயிடமிருந்து PCOS வர வாய்ப்பு இருந்தால் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். நம்முடைய மூளையில் கருமுட்டைகளை கட்டுப்பாட்டில் வைக்க இரண்டு முக்கியமான ஹார்மோன்கள் உற்பத்தியாகிறது.
அதில் ஒன்று LH ( luteinizing hormone) மற்றொன்று FSH (follicle-stimulating hormone). இவை இரண்டும் சரியாக உற்பத்தியானால் மட்டுமே பெண்களுக்கு மாதவிலக்கு சரிவர நடக்கும். இதில் குறைபாடு இருந்தால் மாதவிடாயிலும் பிரச்னைகள் ஏற்படும். விளைவு கருமுட்டையில் PCOS கட்டிகள் உருவாகும். இதனால் மாதவிலக்கு சுழற்சியில் மாற்றம் ஏற்படும். சிலசமயங்களில் மாதவிடாய் இரண்டு மாதத்திற்கு ஒரு முறைகூட ஏற்படும். அதன் காரணமாக முகத்தில் முடி வளர்ச்சி போன்ற மற்றங்களும் நிகழும்’’ என்றவர் கட்டிகள் ஏற்படும் காரணத்தையும் விளக்கினார்.
‘‘உடற்பயிற்சியின்மை, படிப்பு, வேலை காரணமாக சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, சரிவிகித உணவிற்கு பதில் ஜூஸ், பிஸ்கெட், துரித உணவுகளை எடுத்துக்கொள்வது. இவை PCOSக்கு மிக முக்கிய காரணங்கள். குறிப்பாக, இந்தியாவில். இந்த உணவுப் பழக்கத்தால் 10 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடல் பருமன், மாதவிலக்கு சுழற்சியில் பிரச்னை காரணமாக சிலருக்கு கர்ப்பப்பை கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகம். PCOS-ல் பாதிக்கும் பெண்களுக்கு, முகத்தில் (உதடு மற்றும் தாடை) அதிக அளவில் முடி வளர்ச்சி இருக்கும். இதனால் சமூகத்தில் நிறைய அவமானங்களுக்கு ஆளாகின்றனர். அதனால் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். திருமணமான பெண்களுக்கு குழந்தைகள் உருவாகும் வாய்ப்புகளும் குறையும். கருமுட்டைகளுக்கு பதில் நீர் கட்டிகள் ஏற்படுவதால், அது கரு உருவாவதை தடுக்கும்.
PCOS இருக்கும் பெண்களுக்கு இந்த நீர் கட்டிகளையும் மீறி குழந்தை உருவானால், கர்ப்ப காலங்களில் தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும். இதற்கான மருத்துவம் சரியாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், தாயிடமிருந்து குழந்தைக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உள்ளது. சில சமயம் பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு சர்க்கரை நோய் ஏற்படும். சிலருக்கு 40 வயதில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். சரியாக சொல்லவேண்டுமென்றால், 9-ம் வகுப்பிலிருந்து ஒரு பெண்ணிற்கு ஆரம்பிக்கும் இந்த பிரச்சனை அவர்களின் 45 வயது வரை தொடரும். சில சமயங்களில் அடுத்த தலைமுறையும் பாதிக்கும்.
இந்த நோயை பொறுத்தவரை மரபணுவால் உருவாவதை நாம் மாற்ற முடியாது. ஆனால் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தால், இந்த பாதிப்பில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். பெண்கள் அனைவரும் ‘‘women‘s health is nations wealth’’ என்ற வாக்கியத்தை கடைப்பிடிக்கணும். பெற்றோர்களும் பெண் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை சொல்லி கொடுக்கணும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு முக்கால் மணி நேரம் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்த வேண்டும்.
இது போன்ற பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். மேலும், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். கிழங்கு வகைகள், கேக்ஸ், பிஸ்கட், ரஸ்க் போன்றவற்றையும் தவிர்க்கலாம். எந்த ஒரு உணவாக இருந்தாலும் போதும் என்ற மனதினை கடைபிடித்தாலே எந்த நோயும் வராது.
PCOS ஆல் பாதிக்கப்பட்ட பெண்கள் மகப்பேறு நிபுணர் அல்லது உட்சுரப்பியல் நிபுணர்களிடம் (Endocrinologist) முறையாக சிகிச்சை பெறவேண்டும். நீர் கட்டிகளை குறைக்கவும், மாதவிடாயை முறையாக்கவும் ஹார்மோன் மாத்திரைகள் உள்ளது. முகத்தில் முடி வளர்வதைக் கட்டுப்படுத்தும் லேசர் சிகிச்சை முறைகள் உள்ளன. மகப்பேறு பிரச்சனைக்கு Ovulation induction சிகிச்சையினை பின்பற்றலாம்.
ஆனால் PCOS பிரச்னைக்கு மாத்திரைகளை கொண்டே குணப்படுத்தலாம். PCOS பிரச்னை தீவிரமாக இருக்கும் பட்சத்தில் ovarian drilling procedure அறுவை சிகிச்சையினை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை மூலம் பெறலாம். PCOS காரணமாக ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தகுந்த சிகிச்சை முறைகள் மற்றும் தீர்வுகள் உள்ளன. அவர்களின் பிரச்னைக்கு ஏற்ற சிகிச்சையினை மேற்கொண்டாலே PCOSக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.
தொகுப்பு: காயத்ரி காமராஜ்
ரத்தத்தை சுத்தமாக்கும் புதினா!
புதினாக் கீரை சாதாரணமாக எங்கும் கிடைக்கக்கூடியது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல வித நன்மைகளைப் பெற்று நலமுடன் வாழலாம்.
* புதினாக் கீரையை துவையலாக அரைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள ரத்தம் சுத்தமாவதுடன், புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
* எந்தக் காரணத்திலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்த சமயம் புதினாக் கீரையை துவையலாக அரைத்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்று விடும்.
* சிறு குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்படும் போது, புதினாக் கீரையை கஷாயமாக தயாரித்து, ஒரு சங்கு அளவு காலை, மாலை இரண்டு வேளை கொடுத்து வந்தால் உடனே குணமாகும். புதினாக் கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு வாணலியில் போட்டு வதக்கி, அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து, பாதியளவு தண்ணீர் சுண்டிய பிறகு அதை வடிகட்டி, மேற் சொன்ன முறையில் கொடுத்து வந்தால் பரிபூரணமாக குணமாகும்.
* புதினாக் கீரையை ஒரு கைப்பிடிஅளவு எடுத்து, ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, மூன்று மணி நேரம் கழித்து, நீரை வடிகட்டி குடித்து வந்தால் வாந்தி, வாயு கோளாறுகள், வயிற்றுப் பொருமல், வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் குணமாகும்.
* புதினாக் கீரையை சூப்பாக தயாரித்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாவதுடன், இதயம் வலுப்பெறும்.
* புதினாக் கீரையை ஆய்ந்து, வெயிலில் வைத்து நன்றாக காயவைத்து, பொடி செய்து அத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.
* கருத்தரித்த பெண்களுக்கு தலைச் சுற்றல், சோம்பல், வாந்தி போன்றவை கருத்தரித்த இரண்டாவது மாதம் முதல் ஏற்படும். இதனை கட்டுப்படுத்த
புதினாக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்கள் குணமாகும்.
– எஸ்.பாவனா, திண்டுக்கல்.
The post நீர் கட்டிகளால் ஏற்படும் குழந்தையின்மை appeared first on Dinakaran.