கோவை அருகே பட்டீஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பீட்டிலான நிலம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம்..!!

கோவை: கோவை அருகே அருள்மிகு பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பீட்டிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று கோவை மாவட்டம், பேரூர், அருள்மிகு பட்டீஸ்வரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பீட்டிலான நிலம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

கோவை, பேரூரில் அருள்மிகு பட்டீஸ்வரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக 17.96 ஏக்கர் பரப்பிலான நிலம் 11 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. கோவை இணை ஆணையர் அவர்களின் சட்டப்பிரிவு 78ன்படியும், ஆணையரின் மேல்முறையீட்டு சீராய்வு மனு உத்தரவின்படியும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை அரசாணையின்படியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, கோவை மண்டல இணை ஆணையரின் நேரடி மேற்பார்வை மற்றும் உத்தரவின்படி கோவை உதவி ஆணையர் கருணாநிதி முன்னிலையில் திருக்கோயில் உதவி ஆணையர் / செயல் அலுவலர், மண்டலத்திலுள்ள பிற திருக்கோயில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தினை மீட்டு திருக்கோயில் வசம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடியாகும்.

மேலும் மீட்கப்பட்ட நிலங்களில் தென்னை மற்றும் பாக்கு மரங்கள் தோப்பு அமைந்துள்ளது. இவையனைத்தும் பொது ஏலத்தின் மூலம் ஆண்டு குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிகழ்வின்போது திருக்கோயில் உதவி ஆணையர்/ செயல் அலுவலர் திருமதி கே.விமலா, பேரூர் வருவாய் வட்டாட்சியர் திருமதி இந்துமதி, வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) திரு.சதீஷ், காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.ராஜபாண்டியன், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post கோவை அருகே பட்டீஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பீட்டிலான நிலம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: