6 வகை குழம்புடன் 50 ரூபாய்க்கு அன்லிமிட் சாப்பாடு

சென்னையில் உள்ள பல ஓட்டல்களில் வெரைட்டி சாதங்களே ரூ.50க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், திருமங்கலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ரூ.50க்கு 6 வகை குழம்புடன் அன்லிமிட்டெட் மீல்ஸ் தந்து அசத்துகிறார்கள். திருமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அம்பத்தூர் செல்லும் வழியில் திருவல்லீஸ்வரர் ஆர்ச் அருகில் உள்ளது மகி உணவகம். அப்பகுதியில் வசிக்கும் பேச்சுலர், பேமிலி மேன் என அனைத்து தரப்பினரும் இந்த கடைக்கு கஸ்டமர்ஸ் ஆகியிருக்கிறார்கள்.

கடையின் உரிமையாளர் மகி பிரபாகரனை சந்தித்தோம்…“சென்னை நமக்கும் பூர்வீக ஊரு. லயோலா கல்லூரியில் பி.ஏ முடிச்சிட்டு தனியார் டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்துவந்தேன். அம்மா விஜயாவும், பாட்டி நானம்மாவும் முப்பது வருசத்திற்கு மேலாக சாப்பாட்டுக்கடை நடத்தி வந்தாங்க. இதுல வந்த காசுலதான் நான் படிச்சேன். மூன்று வருசத்திற்கும் மேலாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். பிறகு டெலிவரி பாயாக இருந்ததால் மதிய உணவை வெளியில் சாப்பிட வேண்டிய கட்டாயம்.

அலைச்சல் வேலை இல்லையா? கொலப்பசி எடுக்கும். நமக்கு வர வருமானத்துல வயிறார சாப்பிடக்கூட முடியாது. இதேபோலதான் கூலித்தொழிலாளி, பேச்சுலர்ஸ், துப்புரவு பணியாளர்கள்னு எல்லாரும் கஷ்டப்படுவாங்கன்னு யோசிச்சேன். நாம ஏன் அம்மா, பாட்டியோடு சேர்ந்து சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்திசெய்யக் கூடாதுன்னு நினைச்சேன். அம்மா முதல்ல வெரைட்டி ரைஸ் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அதை நான் கொஞ்சம் மாத்தி யோசிச்சேன்.

10 வருசத்துக்கு முன்பு 5 வகை குழம்போட 30 ரூபாய்க்கு அன்லிமிடெட் உணவு கொடுக்க முடிவு செஞ்சோம். தொடர்ந்து கொடுக்கவும் ஆரம்பிச்சோம். விலைவாசி உயர்வால் இப்ப அதையே 50 ரூபாய்க்கு கொடுத்துட்டு இருக்கோம்” என அசத்தலான என்ட்ரி கொடுத்து பேச ஆரம்பித்தார். “சாப்பாட்டோட பொரியல் சேர்த்து மீன்குழம்பு, மட்டன் குழம்பு, சாம்பார், புளிரசம், நண்டுரசம்னு 50 ரூபாய்க்கு கொடுத்துட்டு இருக்கோம். இதோட சிக்கன், பீப் 100 ரூபாய்க்கு கொடுக்குறோம்.

காலைல 3 மணிக்கு மீன் மார்கெட்டுக்கு போய் பிரஷ்சான மீன் வாங்கிடுவேன். அப்பறம் 5 மணிக்கெல்லாம் கோயம்பேடு மார்க்கெட்டுல காய்கறி வாங்கிட்டு வந்துருவேன். பாட்டிக்கு வயசாயிட்டதால அவுங்கள கடைல சமையல் செய்ய மட்டும் வெச்சுக்குவோம். சின்ன வயசுல இருந்தே வேலை செஞ்சு பழகிட்டாங்க. அவங்களால சும்மா இருக்கமுடியாது.பாட்டி மசாலா தயார் செஞ்சி கொடுக்க, அம்மா சமைப்பாங்க. எல்லா உணவுமே வீட்டில் சமைப்பது போல்தான் தயார் செய்வோம்.

அசைவ உணவுகள பொருத்தவரைக்கும் மண்சட்டியிலதான் செய்றோம். அப்பதான் அதோட டேஸ்ட் நல்லா இருக்கும். மதியம் 12 மணி ஆகிடுச்சுன்னா கேஸ் போடுறவுங்க, டெலிவரி பசங்க, பேச்சுலர்ஸ்னு நம்ம கடைக்கு சாப்பிட வந்துருவாங்க. மதியம் 11 மணிக்கே வியாபாரம் தொடங்கிடும். அம்பத்தூர்ல ஐடி கம்பெனில வேலை செய்றவுங்க டிபன் பாக்ஸ்ல பார்சல் வாங்கிட்டு போவாங்க. கடம்பா தொக்கு, தலைக்கறி, இறால் தொக்கு, தோசைக்கல்லுல சுட்ட மீனுன்னு இங்க கஸ்டமர்கள் விரும்பி வாங்கி சாப்பிடுவாங்க.

பள்ளிக்கரணை, வேளச்சேரி, செங்கல்பட்டுல இருந்து அம்பத்தூர், கோயம்பேட்டுக்கு வேலைக்கு வரவங்க இங்க வந்து சாப்பிடுவாங்க. இதில் எங்கள் உணவின் ருசி பிடிச்சவுங்க நிறைய பேரு சனி, ஞாயிறுல குடும்பத்தோடயும் வந்து சாப்பிட்டு போவாங்க. அப்போ சில சுவாரஸ்ய சம்பவம் நடக்கும். அதில் ஒரு அக்கா, வீட்டுல எப்படி மீன் கொழம்பு செஞ்சு கொடுத்தாலும் உங்க கடை டேஸ்ட் வரலன்னு என் கணவர் எங்கிட்ட சொல்றாருன்னு சொல்லி சிரிச்சாங்க. இதுபோல் கேக்குறவங்களுக்கு மீன் குழம்பின் பதம் குறித்து அம்மா சொல்லுவாங்க.

கட்லா, வஞ்சரம், சுறா, ப்ரான் எல்லாம் கொடுத்துட்டு இருக்கோம். உணவகத்துக்கு வர்ற கஸ்டமர்ஸ் 50 ரூபாய்க்கு அன்லிமிடெட் உணவு கொடுத்தாலும், அதையும் நேர்த்தியாவும், ருசியாவும் கொடுக்குறோம்னு சொல்லுவாங்க. அது எங்களுக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கும். கடையில வெளியாட்களை வைத்தால் அவர்களுக்குன்னு தனியா சம்பளம் தரணும். அது கட்டுப் படியாகாது.

அதனால் குடும்பத்தை சேர்ந்த அக்கா, மாமா, அண்ணன்னு நாங்களே உணவகத்தை நடத்தி வர்றோம். இதனால 50 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்குறது எங்களுக்கு கட்டுப்படியாகுது. சாப்பாட்டு விலை குறைவாக இருந்தாலும் நாங்க உணவோட தரத்திலும், ருசியிலும் காம்ப்ரமைஸ் ஆகுறதில்ல. அதனால ஒருமுறை எங்க கடையில சாப்பிட வரவுங்க ரெகுலர் கஷ்டமரா மாறிடுவாங்க”
என்கிறார் மகி பிரபாகரன்.

– சுரேந்திரன்

The post 6 வகை குழம்புடன் 50 ரூபாய்க்கு அன்லிமிட் சாப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: