காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதான மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் செயல்படுத்த பக்தர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் செயல்படாமல் உள்ள மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்கீழ் மஞ்சப்பை பயன்பாடு குறித்து அரசு சார்பில் மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் பொதுஇடங்களில் ரூ.10 செலுத்தி மஞ்சப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டினை கொண்டுவர தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்பட்டது. இதை காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் எம்பி செல்வம் ஆகியோர் துவக்கிவைத்தனர். சில நாட்கள் மட்டும் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் முறையாக செயல்பட்டது.

தற்போது மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. கோயிலுக்கு வரும் ஒரு பக்தர்கள் குச்சிபோன்ற பொருட்களைவிட்டு மஞ்சப்பை எடுக்க முயற்சிப்பதால் தானியங்கி இயந்திரம் பழுதானதாக கூறப்படுகிறது. எனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதான மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் செயல்படுத்த பக்தர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: