கோடை விடுமுறை முடிந்து 7ம் தேதி திறப்பு அரசு பள்ளிகளில் சுகாதார, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவு: மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தல்

சேலம்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 7ம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இதனையடுத்து, பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசுப்பள்ளிகளில் தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட சிஇஓ, டிஇஓக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கல்வி அலுவலர்கள் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளித் தூய்மை சார்ந்து, பள்ளி வளாகங்கள் புதர்கள் மற்றும் குப்பைகளின்றி, காண்பதற்கு அழகாகவும், தூய்மையாகவும் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, சமையலறை மற்றும் கழிப்பறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். திறந்த வெளிக் கிணறுகள் இருப்பின் அதை மூடிட நடவடிக்கை எடுத்து, பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே மூடப்பட வேண்டும்.

வகுப்பறை மற்றும் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள தளவாட பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். ஆய்வகங்கள் அனைத்தும் தூய்மை செய்யப்பட வேண்டும். மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அனைத்தையும், உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாகவும், பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்டும், சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டும் பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து வகையிலும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆவர். மாணவர் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் உள்ளேயும், வெளியேயும் கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவில் சோப்பு அல்லது சோப்புக் கரைசல் திரவம் வைக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளியில் உள்ள அனைத்து மின் சாதனங்கள் மற்றும் மின் சுவிட்ச்கள் நல்ல முறையில் செயல்படுகின்றதா என்பதை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்திட வேண்டும். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் ஏதேனும் இருப்பின், மாணவர்கள் அங்கு செல்லாத வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்ள சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோடை விடுமுறை முடிந்து 7ம் தேதி திறப்பு அரசு பள்ளிகளில் சுகாதார, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவு: மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: