தேனியில் அரிசிக் கொம்பன் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு..!

தேனி : தேனியில் அரிசிக் கொம்பன் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் மூணாறு, சின்னக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த அரிசிக்கொம்பன் காட்டுயானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் விட்டனர். அங்கிருந்த அரிசிக்கொம்பன், திருவில்லிபுத்தூர், மேகமலை, குமுளி வனப்பகுதிகளைக் கடந்து திடீரென தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் கடந்த 27ம் தேதி நுழைந்தது. அங்கு தெருக்கள், சாலைகளில் சென்றவர்களை விரட்டியது. இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

அப்போது ஏடிஎம் மையத்தில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த 65 வயது மதிக்கத்தக்க பால்ராஜ் என்பவரை யானை தாக்கியது. இதில் காயமடைந்த நபரை மீட்டு உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ், மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பால்ராஜ் யானை தாக்கியதில் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜை வனத்துறை அமைச்சர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தேனியில் அரிசிக் கொம்பன் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு..! appeared first on Dinakaran.

Related Stories: