நெல்லை நாங்குநேரி அருகே நகை வியாபாரி மீது மிளகாய் பொடியை தூவி ரூ.1.5 கோடி வழிப்பறி; முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை..!!

நெல்லை: நெல்லை நாங்குநேரி அருகே நகை வியாபாரி மீது மிளகாய் பொடியை தூவி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. நகை வியாபாரியை காரில் பின்தொடர்ந்து வந்த முகமூடி கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்துள்ளனர். நெல்லை டவுனை சேர்ந்தவர் கிஷாந்த். இவர் நெல்லை டவுனில் ஒரு நகை கடை வைத்துள்ளார். மேலும் ஷாப்பிங் பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை சுமார் 6 மணியளவில் சில நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது உதவியாளர் ஒருவருடன் காரில் சென்றுள்ளார்.

இவரது காரை திருநெல்வேலியில் இருந்தே 4 பேர் கொண்ட கும்பல் இரண்டு கார்களில் முன்னும், பின்னும் தொடர்ந்து வந்துள்ளது. சுமார் 7 மணியளவில் நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் வரும் போது திடீரென இரண்டு கார்களில் வந்தவர்கள், நகை வியாபாரி கிஷாந்த் காரை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் தங்களது முகத்தை மறைப்பதற்காக முகமூடியும் அணிந்துள்ளனர். உடனடியாக கிஷாந்த் மீது மிளகாய் பொடியை தூவி, கம்பியால் தாக்கி காரில் ஏற்றி மிரட்டியுள்ளனர். தொடர்ந்து காரில் இருந்து ரூ.1.5 கோடியை கொள்ளையர்கள் வழிப்பறி செய்துள்ளனர்.

இதனை கண்ட சில பேருந்து ஓட்டுனர்கள் கொள்ளையர்களை விரட்டியுள்ளனர். சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் கிஷாந்த்தையும் காரில் தூக்கிக் கொண்டு காரையும் கடத்திச் சென்றுவிட்டனர். சில தொலைவில் வந்த பின்பு நெடுங்குளம் என்ற இடத்தில் கிஷாந்தை இறக்கி விட்டுவிட்டு காரை நாகர்கோவில் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிளகாய் பொடி தூவி நகை வியாபாரியிடம் இருந்து ரூ.1.5 கோடி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நெல்லை நாங்குநேரி அருகே நகை வியாபாரி மீது மிளகாய் பொடியை தூவி ரூ.1.5 கோடி வழிப்பறி; முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை..!! appeared first on Dinakaran.

Related Stories: