நரிக்குறவர் சமூகத்தினருக்கு எஸ்.டி. சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியீடு

சென்னை: நரிக்குறவர் சமூகத்தினருக்கு எஸ்.டி. சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் க.லட்சுமி பிரியா வருவாய் நிர்வாக ஆணையருக்கு, அனுப்பியுள்ள கடிதத்தில் அட்டை வடிவிலான எம்பிசி சான்றிதழை ரத்து செய்துவிட்டு, பழங்குடியினர் எஸ்.டி. சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, புதிய இணையத் தொகுப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதுவரை சாதிச் சான்றிதழ் பெறாத புதிய விண்ணப்பதாரர்களுக்கு, பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக வருவாய்த் துறையால் வெளியிடப்பட்ட நடைமுறைகள், வழிகாட்டிக் குறிப்புகள், வரைமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் சான்றிதழ் கோரி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் உரிய வழிகாட்டுதல்படி, கோட்டாட்சியரால் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே மின் வடிவிலான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால், கோட்டாட்சியர், சார் ஆட்சியரால் பராமரிக்கப்பட்டு வரும் தரவு தளத்தில் பழங்குடியினர் என்று மாற்றி, ஏற்கெனவே வழங்கிய சான்றிதழை ரத்து செய்து, இணையம் வழியாக புதிய சான்றிதழ் வழங்கப்படும் என்றும் இதற்கான நடைமுறை தனியாகத் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார். சான்றிதழ் தொலைந்து போவது, அல்லது ஆவணங்கள், பதிவேடுகள் இல்லாமல் இருப்பது ஆகியவை தொடர்பான விண்ணப்பங்களை, புதிய சான்றிதழுக்கான விண்ணப்பங்களாகக் கருதி, பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

The post நரிக்குறவர் சமூகத்தினருக்கு எஸ்.டி. சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: