பரமேஸ்வரியின் மாமியார் யார்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கயிலையில் ஒருநாள் பரமேஸ்வரனும், பரமேஸ்வரியும் ஏகாந்தமாக உரையாடிக்கொண்டிருந்தார்கள். ஆதியும் அந்தமும் இல்லாத அந்த ஜோதி ஸ்வரூபனை அம்பிகை வியப்புடன் நோக்கினாள். ‘‘என்ன?’’ என்று கேள்வியாகப் பார்த்தார் தயாபரன். ‘‘எனக்கு ஒரு சந்தேகம்,’’ என தேவி தொடர்ந்தாள். ‘‘நான் பூவுலகில் பல வடிவங்கள் தாங்கி பல நற்செயல்கள் புரிந்திருக்கிறேன்.

அதற்கு முக்கிய காரணம் தாங்கள்தான். தங்கள் கோபமோ அல்லது சந்தோஷமோ என்னை பூமிக்கு அனுப்பி அவ்வாறு வடிவங்கள் கொள்ள வைத்திருக்கிறது. அந்த வகையில், நான் பர்வதராஜனின் மகளாகப் பார்வதியாக, பர்வத வர்த்தினியாக உருவெடுத்திருக்கிறேன். ஹிமவானின் மகள் ஹிமாவதி என்றும் பெயர் பெற்றிருக்கிறேன்.

மதங்க முனிவரின் புதல்வியாக மாதங்கியாக அவதரித்திருக்கிறேன். ஏன், மீனவக் குடும்பத்துப் பெண்ணாகவும் பிறந்திருக்கிறேன். இந்த வகையில், எனக்குப் பெற்றோர் அமைந்துவிட்டார்கள். ஆனால், தங்களுக்கு இப்படி ஒரு பாச ஏக்கம் தோன்றியதில்லையா? நீங்கள் பரம்பொருள்தான், ஆதிமூலம்தான். ஆனாலும் நீங்கள் படைத்த ஜீவராசிகள் எல்லாம் தாய், தந்தை என்று சொந்தங்கள் அமையப்பெற்று மகிழ்வது போல, தங்களுக்கு அமையவில்லையே என்று எப்போதாவது வருத்தம் கொண்டிருக்கிறீர்களா?’’

தாயுமானவன், அம்பிகையைப் பார்த்து மெல்லச் சிரித்தார். ‘‘உண்மைதான். தட்சன் என்ற மாமனார், விநாயகன் – முருகன் என்று இரு பிள்ளைகள், என் தேவியாகிய நீ என்ற என் குடும்ப வாழ்க்கையில் எனக்கென்று தாயும், தகப்பனும் இல்லாதது கொஞ்சம் வருத்தம்தான். அதே சமயம், நம் குடும்பத்தைப் பொறுத்தவரை உனக்கு மாமனார், மாமியார் என்று இல்லாது போயிற்றே, அதுபற்றி உனக்கு வருத்தம் ஏதேனும் உண்டா?’’ என்று கேட்டார்.

பளிச்சென்று நிமிர்ந்தாள் தேவி. ‘‘ஆமாம், உண்மைதான். என் உறவில் அந்தப் பகுதி வெற்றிடமாகத்தான் உள்ளது. மாமியார் என்ற பாசத்தை நான் அனுபவிக்கவில்லைதான். ஆனால், இனிமேலும் உங்களால் மட்டும் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர முடியுமா என்ன?’’ என்று ஆதங்கத்துடன் கேட்டாள். உலகை ஆளும் நாயகன் முறுவலித்தான்.

‘‘ஏன் முடியாது? உலகையே ரட்சிப்பவன் நான் என்று தெரிந்தும், இதற்கு எப்படி உணவு கிடைக்கிறது என்று பார்க்கலாம் என்ற வீம்போடு ஓர் எறும்பை ஒரு சிமிழுக்குள் அடைத்து வைத்தாயே, பிறகு சிமிழைத் திறக்க, அந்த எறும்பும் ஓர் அரிசி மணியைத் தன் வாயால் கவ்விக் கொண்டிருந்ததைப் பார்த்து என்னை வியந்தாயே! அடைக்கப்பட்ட ஒரு ஜீவனுக்கும் என்னால் போஜனம் அளிக்க முடிந்தது என்றால், உனக்காக ஒரு மாமியாரை உருவாக்க முடியாதா, என்ன?’’தன் மணாளனைக் குழப்பத்துடன் பார்த்தாள் மனோன்மணி. ‘‘என் மாமியார் இனியும் பிறந்து வருவாரா என்ன?’’ ‘‘இல்லை, ஏற்கெனவே பிறந்துவிட்டாள். உனக்கு இனிமேல்தான் அறிமுகமாகப் போகிறாள்,’’ என்று புதிர் போட்டார் பரமேஸ்வரன்.‘‘அட, யார் அவர்?’’ என்று ஆவல் ததும்ப வினவினாள் விசாலாட்சி.

பூலோகத்தில், தமிழ்நாட்டில் இப்போது காரைக்கால் என்றழைக்கப்படும் அந்நாளைய காரைவனம், ஓர் அற்புதத் திருத்தலம். அங்கே புனிதவதி என்ற பெண் சிறுவயது முதலே சிவபக்தி பூண்டிருந்தார். உரிய வயதில் பரமதத்தன் என்ற வணிகரை மணந்து இல்லறம் பேணினார். ஒருமுறை பரமதத்தனின் வணிகத் தலத்துக்கு வந்த நண்பர் ஒருவர் அவனுக்கு அன்புடன் இரண்டு மாங்கனிகளைத் தந்தார். மதியம் உணவு வேளையில் அதை அருந்தலாம் என்று கருதிய பரமதத்தன் அவற்றைத் தன் வீட்டிற்கு ஏவலாள் மூலம் கொடுத்தனுப்பினான். அவற்றை வாங்கி வைத்தார் புனிதவதி.

சற்றைக்கெல்லாம் ஒரு சிவனடியார் பிட்சை கேட்டு வர, அவருக்கு நிறைவாக விருந்தளிக்க அப்போதைக்கு மதிய உணவு தயாரிக்கப்படாததால் தயிர் அன்னத்தையும், கணவன் அனுப்பியிருந்த மாங்கனிகளில் ஒன்றையும் பரிவுடன் அளித்தார். அவற்றை உண்டு, வயிறும், மனமும் நிறைய நன்றியுடன் விடைபெற்றுக்கொண்டார் சிவனடியார்.

மதிய உணவுக்காக கணவன் வந்த பிறகு, அதற்குள்ளாக ஆக்கி வைத்திருந்த சமையல் பண்டங்களோடு மீதமிருந்த மாங்கனியையும் சேர்த்துப் பரிமாறினார் புனிதவதி. கனியை ருசித்து களிப்படைந்த பரமதத்தன், இன்னொன்றையும் தனக்கு அளிக்குமாறு மனைவியிடம் கேட்டான். அடியாருக்குத் தானமளித்துவிட்டதை அறிந்தால் அவன் கோபப்படுவானோ என்று கருதி, உள்ளே சென்று மனமுருக ஈசனை வேண்டினாள்.

உடனே அவள் கரங்களில் ஒரு மாங்கனி வந்து அமர்ந்தது. அதை கணவருக்குப் பரிமாற, அதை ருசித்த அவன், இதன் சுவை முந்தைய கனியைவிட வித்தியாசமாக, அதிஅற்புதமாக விளங்கியது கண்டு அதிசயித்தான். ஒரே மரத்து இரு கனிகளில் ஒன்றைவிட மற்றொன்று பேரானந்த ருசி கொண்டிருப்பது எப்படி சாத்தியம் என்று ஐயம் கொண்டான்.

உடனே புனிதவதி நடந்ததைச் சொல்ல, அவனுக்குச் சந்தேகம் வலுத்தது. மனைவிக்கு அருளிய இறைச்செயலை அவனால் நம்ப முடியவில்லை; ஏற்கவும் அவன் தயாராக இல்லை. ஆகவே, ‘இதேபோன்ற இன்னுமொரு கனியை இறையருளால் பெற்றுத் தா’ என்று கோரினான். வேறு வழியின்றி அம்மையார் அம்பலவாணனை வேண்டிக்கொள்ள, மற்றும் ஒரு மாம்பழம் அவர் கரங்களில் வந்து விழுந்தது.

இதைப் பார்த்து பிரமித்த பரமதத்தன், தெய்வாம்சம் பொருந்திய அந்தப் பெண்ணுக்குக் கணவனாக விளங்கத் தனக்குத் தகுதியில்லை என்று கருதி இல்லத்தை விட்டு நீங்கினான். மதுரை நோக்கிச் சென்ற அவன் சிலகாலம் பின்னால் இன்னொரு பெண்ணை மணந்து ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையுமானான். தெய்வமனைவியின் நினைவாக இந்தக் குழந்தையை ‘புனிதவதி’ என்றழைத்து மகிழ்ந்தான்.

ஆனால், புனிதவதியின் உறவினர், பரம தத்தன் மதுரையில் வாழ்வது அறிந்து அவளுக்கு நியாயம் கேட்க அவனிடம் அழைத்துச் சென்றார்கள். முன்னாள் மனைவியைப் பார்த்த உடனேயே உள்ளம் நெகிழ்ந்தான் பரமதத்தன். தன் புது மனைவி, மகளோடு அவர் கால்களில் வீழ்ந்து அருள் புரியுமாறு வேண்டினான். திடுக்கிட்டு நகர்ந்தார் புனிதவதி. ‘கண் கண்ட தெய்வமாம் கணவனே தன் காலில் விழுவதா!’ என்று பதறிய அவர், இனியும் உணர்வு நிறைந்த உடலோடு இப்பூவுலகில் வாழக் கூடாது என்று தீர்மானித்தார்.

உடனே இறைவனை வேண்டி, யௌவனம் நீங்கிய சருகு போலும் உடல் பெற்றார். அதற்குள் ஊரில் அவரை அனைவரும் தெய்வப் பிரதிநிதியாகக் கருதி வணங்கத் தொடங்கி, அவரை ‘காரைக்கால் அம்மையார்’ என்றே அழைத்துப் போற்றினர். எதிர்பாராமல் தனக்குப் புது அங்கீகாரமும் விளம்பரமும் கிடைப்பதை விரும்பாத அவர், இறைவனை நேரில் தரிசித்து அவனோடு ஐக்கியமாகிவிடும் பொருட்டு கயிலாயம் நோக்கி நடந்தார் காரைக்கால் அம்மையார். உலகத் தலைவன் உறையும் வெள்ளிப்பனிமலைமீது பாதம் படலாகுமா? அதற்கு அஞ்சி தலையால் நடந்தார். மலை தூரம் கடந்தார்.

உமையவளிடம் அந்தக் காட்சியைக் காண்பித்தார் ஈஸ்வரன். அதோடு, தானே கீழே ஓடோடி இறங்கிச் சென்று, ‘அன்னையே, என் தாயே…’ என்றழைத்தபடி அம்மையாரைத் தாங்கிப் பிடித்தார். ‘அப்பனே, என் ஐயனே…’ என்று பாசமிகு மகனின் பிடியில் சிக்குண்ட அன்புத்தாய் போல அரற்றினாள் அம்மையார். அந்தக் காட்சியைக் கண்ட பார்வதிக்கு உள்ளம் நெகிழ்ந்தது. ‘இதோ என் கணவரின் தாயார், அதாவது என் மாமியார்’ என்று மனம் பூரிக்கச் சொல்லி தானும் அவரை ஆரத்தழுவி கயிலைக்கு மெல்ல இட்டுச் சென்றாள். அம்மையை அப்படியே தூக்கித் தன் அருகே அமர்த்திக் கொண்டார் ஈசன்.

சிவாலயங்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவச்சிலைகளை நாம் தரிசிக்கிறோம். அவர்களில் அனைவரும் நின்ற கோலத்தில் விளங்க, காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த கோலம் கொண்டிருப்பார். தன் பிரதான அடியவர்களான 63 நாயன்மார்களில் ஒருவராக காரைக்கால் அம்மையாருக்கு அங்கீகாரம் அளித்ததோடு, தன்னுடைய தாயாராகவும் அவரை ஏற்றுக் கொண்டதால், தாய்க்குக் கொடுக்கும் மரியாதைபோல அவரை அமர்ந்த நிலையிலேயே காட்சியளிக்கச் செய்தார் கயிலைநாதன்.

அறுபத்து மூவரில், இசைஞானியார், மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார் ஆகிய மூவரே பெண்கள். இவர்களிலும் காரைக்கால் அம்மையாருக்கு மட்டுமே இவ்வாறு அமர்ந்திருக்கும் பேறு கிட்டியிருக்கிறது. பதினோராம் திருமுறையில் இரண்டாவது பனுவல் காரைக்கால் அம்மையார் இயற்றியது. தேவார காலத்துக்கு முன்பே இசைத் தமிழால் இறைவனைப் பாடியவர் இவர். அதனாலேயே ‘இசைத் தமிழின் அன்னை’ என்று போற்றப்படுகிறார். இவருடைய பதிக முறையைப் பின்பற்றியே தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: பிரபு சங்கர்

The post பரமேஸ்வரியின் மாமியார் யார்? appeared first on Dinakaran.

Related Stories: