ஊதியம், பணி இடங்கள் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் காணொலியில் நேற்று நடந்தது. கூட்டத்தில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இளநிலை எம்பிபிஎஸ் படிப்புக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்த தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்புக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகுதியான ஆசிரியர்கள் இருப்பதால் நாடு முழுவதும் எம்பிபிஎஸ் சேர்க்கைக்காக மாணவர்களிடையே பெரும் போட்டி நிலவி வருவது. அப்படி இருக்கையில் மூன்று கல்லூரிகளின் அங்கீகார ரத்து என்பது ஏற்புடையதல்ல. மேற்படி கல்லூரி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்து அனுப்பும் பொருட்டு உடனடியாக ரத்து செய்வதை கை விட வேண்டும்.

நாடு முழுவதும் ஒரே சீராக மருத்துவப் படிப்பை கொடுக்கும் நோக்கத்தில் தேசிய மருத்துவ ஆணையம் செயல்படுவது உண்மையானால் அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம், படிகள், உயர் பதவிகள், பணி சூழல் மற்றும் தேவையான வசதிகளை செய்து தர மாநில அரசுகளை வற்புறுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு மருத்துவர்கள் துணையாக இருப்பார்கள். அதே நேரத்தில் கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் மட்டும் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுக்காது, அரசு மருத்துவர்கள், பேராசிரியர்கள் மிக மிக முக்கியம் என்பதை இந்த நேரத்தில் தமிழக அரசு உணர்ந்து எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகளான அடிப்படை ஊதியம், உயர் பதவிகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப பணி இடங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் காலம் தாழ்த்தாமல் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

The post ஊதியம், பணி இடங்கள் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: