சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்? அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு ‘லைகா’ சினிமா தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக ஒன்றிய அமலாக்கத்துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு நிறுவனங்களுக்கு பணம் எந்த வித கணக்குகளும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதேபோல், கல்லால் குழுமத்திலும் அப்போதே அமலாக்கத்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத் நடத்தும் சாய்ராம் நிறுவனத்துக்கு எந்த வித கணக்குகளும் இல்லாமல் ரூ.8.50 கோடி வரை. கலால் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது. இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் எம்.பி. ரவீந்திரநாத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், எம்பி.ரவீந்திரநாத் அமலாக்கத்துறையில் எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதைதொடர்ந்து அமலாக்கத்துறை சட்ட விரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் தேனி எம்பி. ரவீந்திரநாத்துக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல், ‘லைகா’ சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பில் தி.நகரில் உள்ள சொத்து முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், சட்டவிரோத பணம் பரிமாற்ற சட்டத்தின் கீழ் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் முழுமையாக தகவல்கள் அளிக்கப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்? அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: