இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் ஜப்பான் நிறுவனங்கள் பெருமளவு முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்திட வேண்டும்: முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: இந்தியாவுக்குள், தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலம். எனவே, ஜப்பானிய நிறுவனங்கள் முதலீடுகளை பெருமளவில் தமிழ்நாட்டுக்கு அளித்திட வேண்டும் என்று ஜப்பானில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து பேசினார். ஜப்பான் நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அந்நாட்டின் டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (ஜெட்ரோ) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். இம்மாநாட்டில் சுமார் 200 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை 2024ம் ஆண்டு ஜனவரி மாதம், மிகப் பெரிய அளவில், சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். உங்களை அந்த மாநாட்டிற்கு வரவேற்றிடவும், முதலீடுகளை பெருமளவில் எங்கள் மாநிலத்துக்கு அளித்திட கேட்டு கொள்ளும் விதமாக, உரையாற்றுகிறேன். இந்தியாவுக்குள், தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக விளங்குகிறது. தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். நிசான், தோஷிபா, யமஹா, கோமாட்ஸூ, ஹிட்டாச்சி போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளது.

அது மட்டுமல்ல, ஜப்பான்- இந்தியா முதலீடு மேம்பாட்டு கூட்டாண்மை திட்டத்தின் கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசை பொறுத்த வரையில், எப்போதுமே, ஜப்பான் நாட்டின் உறவுகளை மேம்படுத்தி கொள்ள முயற்சிகள் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இந்தியாவில், 2030-2031 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான ஒரு லட்சிய இலக்கினை நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம்.

கடந்த 2 ஆண்டுகளில், பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி, இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி ரூபாய் என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே 5,596 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4,244 நபர்களுக்குவேலை வாய்ப்பு என்ற வகையில், 5 ஜப்பானிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஜப்பானிய நிறுவனங்களுக்கு சில கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன். ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடுகளை மேற்கொள்கின்றன.

இந்நிலையை சற்றே விரிவுபடுத்தி, உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களிலும் முதலீடு மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கிறேன். உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்வது என்பது உங்களது உற்பத்தி திட்டங்களை மேம்படுத்தவும் உதவிகரமாக அமையும். புதிய தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம். அதிலும் உங்களது மேலான முதலீடுகளை வரவேற்கிறோம். உங்களது தொழிற்சாலைகளை எங்கள் மாநிலத்தில் அமைக்கும் போது, அதுதொடர்பான தலைமை அலுவலகத்தையும் எங்கள் மாநிலத்திலேயே அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் இளைய சக்தியை வளமிக்கதாக மாற்றி கொண்டிருக்கிறோம். ‘நான் முதல்வன்’ என்ற எனது கனவு திட்டத்தின் மூலமாக மாணவர்கள், இளைஞர்கள் அனைவரையும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பல்துறை வல்லுநர்களாக வளர்த்து வருகிறோம். பெண்களை தொழில்நுட்ப வல்லுநர்களாக உயர்த்தி வருகிறோம். எனவே, உங்களது நிறுவனங்களுக்கு மிகச்சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு அரசும், திறந்த மனத்தோடு அனைத்து தொழில் நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் அரசாக இருக்கிறது. நிர்வாக உதவி, மனித ஆற்றல் இணைந்து கிடைக்கும் மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை ஜப்பானிய நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2024 ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாபெரும் நிகழ்வுக்கு நீங்கள் அனைவரும் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களுடனான மதிய உணவு சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.கஸ்டாலின் உரையாடினார். நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, துணை ஆளுநர் ஹிடிகி தனாகா முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டு துணைத் தூதர் மாசாயுகி டகா நிறுவனத்தின் செயல் அலுவலர் யாசுமிச்சி டாசுனோக்கி மற்றும் சென்னை கிளை தலைவர் டகேசி ஹிரானோ, மிட்சுபா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேலாண்மை அலுவலர் கோஜி மிசுனோ, ஜெஜிசி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை தலைவர் சியுசி ஒகாவா உட்பட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் ஜப்பான் நிறுவனங்கள் பெருமளவு முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்திட வேண்டும்: முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: