தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கு புதிய துணை வேந்தர் நியமனம்: தமிழ்நாடு ஆளுநர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்டார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சுதாசேஷய்யன் கடந்த ஆண்டு வரை பதவியில் இருந்தார். இந்நிலையில், புதிய துணைவேந்தரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று நியமித்தார். அதற்கான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமிக்கப்படுகிறார். இவர் இந்த பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார். சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர் கே.நாராயணசாமி தற்போது தலைவராக(டீன்) பணியாற்றி வருகிறார். இவர் 33 ஆண்டுகளாக மருத்துவத்தில் அனுபவம் பெற்றுள்ளார். குறிப்பாக மருத்துவ கண்காணிப்பாளர், மாநில சிறப்பு அதிகாரியாக பல்வேறு அரசுத் திட்டங்கள் உள்பட பணியாற்றியுள்ளார்.

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரிகளில் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் நோய்த்துறையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். கொரோனா காலத்தில் தனியாக உருவாக்கப்பட்ட கொரோனா மருத்துவமனையின் பொறுப்பாளராக அரசால் நியமிக்கப்பட்டார். இது தவிர சென்னை மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் மற்றும் பித்தநீர் தொடர்பான அறிவியல் துறையை ஏற்படுத்தி அதற்கு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சர்வதேச அளவில் பல கருத்தரங்குகளை நடத்தியதுடன் அவற்றில் பங்கேற்றுப் பேசியுள்ளார். தற்போது தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் கே.நாராயணசாமி அந்த பதவியில் சேர்ந்த நாளில் இருந்து 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கு புதிய துணை வேந்தர் நியமனம்: தமிழ்நாடு ஆளுநர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: