மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12ல் தண்ணீர் திறப்பு; திருவாரூரில் குறுவை சாகுபடி தீவிரம்: கடந்த ஆண்டை விட கூடுதலாக சாகுபடி செய்ய இலக்கு

வலங்கைமான்: டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் ஆற்றுப்பாசனத்தை நம்பியும், 20 சதவீதம் ஆழ்துளை கிணற்று தண்ணீரை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் ஒரு பகுதியாக வலங்கைமானில் நடப்பாண்டில் சுமார் 10,000 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வலங்கைமானில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றது. இந்த பாசனத்தின் மூலம் கடந்தாண்டு சுமார் 4000 ெஹக்டேரில் குருவையும், 8 ஆயிரத்து 950 ஹெக்டேரில் சம்பாவும் சாகுபடி செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிவுற்றள்ள நிலையில், தற்போது கோடை சாகுபடி ஆக சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் பருத்தி, குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட புலவர் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மானிய விலையில் விதை நெல், உரம் குறுவை சாகுபடி பணிகள் சீராக நடைபெற உதவிடும் வகையில் வேளாண் கிடங்குகள் மூலமாக 50 சதவீதம் மானியத்தில் விதை நெல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும். குறிப்பாக கடந்தாண்டு சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் மிகப்பெரிய அளவில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சாகுபடி பணிகளை செய்து முடிக்கும் வகையில் தங்கு தடையின்றி மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும். வேளாண் கடன் திறந்து விடப்படும் தண்ணீர் ஆறுகளில் சென்று கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும். ஆறுகளில் இருந்து பாசனத்திற்காக பிரியும் சிறு, குறு வாய்க்கால்களிலும் செல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு தண்ணீர் சென்றால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படும். இவைகளை குறையின்றி செய்வதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என தெரிவித்தனர்.

The post மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12ல் தண்ணீர் திறப்பு; திருவாரூரில் குறுவை சாகுபடி தீவிரம்: கடந்த ஆண்டை விட கூடுதலாக சாகுபடி செய்ய இலக்கு appeared first on Dinakaran.

Related Stories: