விருத்தாசலம் பகுதியில் சாமந்தி பூ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை-இழப்பீடு வழங்க கோரிக்கை

வேப்பூர் : விருத்தாசலத்தை அடுத்துள்ள சின்னவடவாடி, வடக்குப்பம், விஜயமாநகரம், ஆலடி, குறவன்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் நிற சாமந்தி பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது.இந்த மஞ்சள் நிற சாமந்தி பூக்கள் நாள்தோறும் அறுவடை செய்யப்பட்டு தினசரி விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி சுற்றுவட்டார பூ கடைகளுக்கு நேரடியாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ஒரு­கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்­பனை செய்யப்படும். நாள் ஒன்றுக்கு ஏக்கருக்கு 200 முதல் 300 கிலோ அறுவடை செய்யப்படும். இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகளவில் பயிரிடப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மழையால் மகசூல் அதிகரித்து பூக்கள் விளைச்சலும் அதிகரித்துள்ளது. இந்தாண்டு வழக்கத்தைவிட 3 மடங்கு விளைச்சல் அதிகரித்ததால் அனைத்து இடங்களிலும் சாமந்தி பூ விலை மிகவும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பத்து ரூபாய்க்கு வாங்கி வந்த வியாபாரிகள் தற்போது ஐந்து ரூபாய்க்கு கூட வாங்க முன்வராததால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

பூ பறிப்பதற்கே கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாய் செலவாவதால் விவசாயிகள் பூக்களை பறிக்காமலே செடியிலே விட்டுவிடுகின்றனர். ஒருவார காலத்திற்கு மேல் அறுவடை செய்யப்படாமல் வயலில் இருக்கும் பூக்கள் செடியோடு கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.இதுகுறித்து சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி வேல்முருகன் கூறியதாவது: சாமந்தி பூக்கள் பயிரிட்ட நாள் முதல் நோய் தாக்குதல், தொடர் மழை என அனைத்தையும் சமாளித்து நல்ல விளைச்சல் கிடைத்தும் உரிய விலை இல்லாததால் பூக்களை வாங்க ஆள் இல்லாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் சாமந்திப்பூ பயிரிட்டு அறுவடை செய்வதற்கு ஆட்கள் கூலி, மருந்து, உரம் உள்ளிட்டவற்றுக்கு சுமார் நாற்பதாயிரம் முதல் அறுபதாயிரம் ரூபாய் செலவாகி உள்ளது. செலவு செய்த ரூபாயை கூட ஈட்ட முடியவில்லை. இதனை சரி செய்யும் பொருட்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்து பூக்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.

The post விருத்தாசலம் பகுதியில் சாமந்தி பூ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை-இழப்பீடு வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: