மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கான மீண்டும் இல்லம் திட்டம் விரைவில் அமல்: 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக செயல்படுத்தும் பணி தீவிரம்

* பிறரை சாராமல் இணைந்து வாழ்வதற்கான புதிய முயற்சி

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கான ‘மீண்டும் இல்லம் திட்டம்’ விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் 14,27,979 மாற்றுத்திறனாளிகளில், 2,33,314 பேருக்கு மாதந்தோறும்ரூ.2000 உதவி ெதாகை வழங்கப்படுகிறது. அதேபோல வருவாய்த்துறை தரப்பில் 4,48,183 பேருக்குரூ.1500 மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி, ஆதரவற்ற மனநலம் சார் மற்றும் திறனாளிகளுக்கான மீட்பு திட்டம், மறுவாழ்வு இல்லங்கள், தொழுநோய் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்கள், தசைச்சிதைவு நோய் சார் மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள், முதுகு தண்டுவடம் சார் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்கள், உதவி உபகரணங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், திருமண உதவி தொகை உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.

அந்தவகையில், 2023-24ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் பொருட்டு ‘‘மீண்டும் இல்லம்’’ எனும் புதிய திட்டம்ரூ.50 லட்சம் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்கள், மனநலம் சார் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்கள், இடைநிலை பராமரிப்பு மையங்கள் என மனநலம் சார்ந்த பிரச்னைகளை உடையவர்களுக்கென தனியாக செயல்பட்டு வருகின்றன. இதில், தற்போது ‘‘மீண்டும் இல்லம் திட்டம்’’ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.

இடைநிலை பராமரிப்பு மையங்கள்: மனநலம் சார் மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்டு இடைநிலை பராமரிப்பு மையங்கள் மதுரை, ராமநாதபுரம், திருப்பத்தூர், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் 700 பயனாளிகள் தங்கி பயன் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் மனநலம் பாதிக்கப்பட்டு, குணமடைந்து குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சைகளும் தொழிற்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கென இந்த மறுவாழ்வு மையங்கள் மூலமாகவும், பராமரிப்பு மையங்கள் மூலமாகவும் செய்யப்பட்டு வரும் நிலையில் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீண்டும் இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டம் குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில்: மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் மறுவாழ்வு இல்லங்களில் தங்கி மருத்துவ சிகிச்சைகள் மூலமாக குணமடைவார். எனினும், வீட்டில் இருப்பவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாமல் இருப்பார்கள். அவர்களை மீண்டும் அந்த மறுவாழ்வு இல்லங்களுக்கே அனுப்பாமல் மற்றவர்களை போல சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ வைப்பதே ‘‘மீண்டும் இல்லம் திட்டம்’’.

மனநலம் குணமடைந்த பின்னர் பெற்றோரோ, உறவினரோ அல்லது சொந்தகாரர்களோ அடைக்கலம் கொடுக்காத பட்சத்தில் அவர்கள் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்படுகின்றனர். இங்கு அடுத்த கட்டமாக கூடை பின்னுதல், பேக்கரியில் வேலை செய்தல் போன்ற வேலைகளை அவர்களுக்கு கற்று கொடுத்தால் அவர்களின் மனநிலையும் மாற்றம் அடையும் அவர்களும் மற்றவர்களை போல வாழ எண்ணங்களையும் ஊக்குவிப்போம். இதன் மூலமாக முழு மனிதனாக அவர்களை உருவாக்கிய பின்னர், அவர்களை சமுதாயத்தில் ஒன்றிணைந்து வாழ வகை செய்வது தான் ‘மீண்டும் இல்லம் திட்டம்’.

இந்த திட்டம் மூலமாக மனநலம் பாதிக்கப்பட்டு முழுவதுமாக பூரண குணமடைந்த நபர் சாதாரணமாக மனிதர்கள் வாழ்வதை போல வாழலாம். அதன்படி, அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக குணமடைந்த நான்கு நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வீடு எடுத்துக்கொடுத்து சாதாரண மனிதர் எப்படி தன்னுடைய வேலைகளே தானாக செய்து கொள்கிறாரோ அதேபோல, வேலைக்கு செல்வது, வீட்டில் சமைப்பது, பொழுதுப்பொக்கிற்காக வெளியே செல்வது போன்ற விஷயங்களை செய்துக்கொள்ளலாம். அவர்கள் அவர்களுக்கு பிடித்தது போல இருப்பதற்கான சூழலை தான் அரசு ஏற்படுத்தி தருகிறது. இதன் மூலமாக குணமடைந்தவர் பெற்றோரோ அல்லது உறவினரோ யாருடைய உதவிகளை நாடி இருக்க தேவையில்லை.

பிறரை சார்ந்து இல்லாமல் தாமாக இணைந்து வாழ்வதற்கான புதிய திட்டம் தான் இவை. இதனை செயல்படுத்துவதற்கான திட்டங்களுக்காக மாவட்டங்களை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

* இந்தியாவிலேயே முன்னோடி திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் ஏற்கனவே, ‘‘உரிமைகள் திட்டம்’’ என்ற திட்டத்தினை உலக வங்கி உதவியுடன்ரூ.1773.87 கோடி மதிப்பீட்டில் அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக மனநலம் குணமடைந்தவர்களுக்கு அரசு கொண்டுவந்துள்ள திட்டம் தான் ‘‘மீண்டும் இல்லம்’’. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

* கண்காணிப்பில் இருப்பார்கள் மனநலம் குணமடைந்து இந்த திட்டம் மூலமாக தனியாக வீடு எடுத்து வசித்து வந்தாலும், தனியார் தொண்டு நிறுவனங்களின் கண்காணிப்பில் தான் இருப்பார்கள்.

* முதற்கட்டமாக 10 இல்லங்கள்

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 10 இல்லங்கள் தொடங்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு இல்லங்களுக்கு எனரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கான வீடு வாடகை, வீடு முன்பணம், வீட்டிற்கு தேவையான பொருட்கள், மளிகை பொருட்கள், மருத்துவ செலவுகள் என 9 மாதங்களுக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளன. இந்த திட்டம் மூலம் 40 நபர்கள் பயன் அடைவர்.

* தேர்வு செய்யும் முறை

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மனநல திட்டத்தின் கீழ், மாவட்ட மன நல மருத்துவர் இந்த மையங்களுக்கு சென்று அதில் யார் பூரணமாக குணமடைந்தவராக உள்ளார்களோ அவர்களை தேர்வு செய்து அடுத்த கட்டமாக மீண்டும் இல்லம் திட்டத்தில் இணைப்பர்.

The post மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கான மீண்டும் இல்லம் திட்டம் விரைவில் அமல்: 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக செயல்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: