சென்னையில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது: * மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

* வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கோடை வெயிலின் தொடர்ச்சியாக சென்னை விமான நிலையத்தில் 108 டிகிரி, திருத்தணியில் 106 டிகிரி என நேற்று வெயில் கொளுத்தியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. எனினும், திருப்பூரில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. தமிழ்நாட்டில் கோடை வெயில் காலம் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து, ஜூன் மாதம் முதல் தேதியில் ெதாடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று வெயிலின் தாக்கம் சில இடங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன் தொடர்ச்சியாக திருத்தணியில் 106 டிகிரியாக இருந்தது. மேலும் பாளையங்கோட்டை, வேலூர் மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. கடலூர், கரூர், மதுரை, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை 102 டிகிரி, திருச்சி, புதுச்சேரி, காரக்கால், ஈரோடு மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது.

இந்நிலையில், கரூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக வெப்பம் நிலவியது. சென்னை, கோவை, மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருவள்ளூர், ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இது போன்ற நிகழ்வுகளால் நீடித்து வரும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. குறிப்பாக திருப்பூரில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும், நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. மணிக்கு 40 கிமீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசியது.

இதையடுத்து, தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இன்றும் நாளையும் பெய்யும். 31ம் தேதியில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதுதவிர, 30ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை இருக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை இருக்கும்.

The post சென்னையில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது: * மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: