* வனத்துறையினருடன் அமைச்சர் ஆலோசனை
கம்பம்: கம்பத்தை கதிகலக்கிய அரிசிக்கொம்பன் யானை சுருளி அருவி, மேகமலை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அருவிக்கு செல்ல பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் மூணாறு, சின்னக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த அரிசிக்கொம்பன் காட்டுயானையை கடந்த ஏப். 30ம் ேததி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் விட்டனர். அங்கிருந்த அரிசிக்கொம்பன், திருவில்லிபுத்தூர், மேகமலை, குமுளி வனப்பகுதிகளைக் கடந்து திடீரென நேற்று முன்தினம் காலை தேனி மாவட்டம், கம்பம் நகரில் உள்ள மின்வாரிய அலுவலக பகுதிக்கு வந்தது. அங்கு தெருக்கள், சாலைகளில் சென்றவர்களை விரட்டியது. இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். ஆட்டோவை தள்ளி சேதப்படுத்தியது. டூவீலரில் வந்தவரை தாக்கியதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
கம்பம் நகராட்சியினர், போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். மக்களின் பாதுகாப்பு கருதி கம்பத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. வெளிநபர்கள் கம்பம் நகருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கம்பம் அருகே ஆங்கூர்பாளையம் சாமுண்டிபுரம் பகுதியில் நுழைந்த அரிசிக்கொம்பன் நள்ளிரவு சுருளிப்பட்டி கிராமத்தில் புகுந்தது. சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் உள்ள பலா மரத்தில் பழங்களை ருசித்த பின் அருகில் இருந்த மணிகண்டன் என்பவரது தோட்டத்தில் உள்ள கேட்டை உடைத்து பழைய சுருளி அருவி சாலை வழியாக சென்றுள்ளது. ரேடியோ காலரிலிருந்து சிக்னல் கிடைக்காததால் யானையின் இருப்பிடத்தை தற்போது சரியாக கணிக்க முடியவில்லை. எனினும் தற்போது கூத்தநாச்சி ஆறு, சரளிமேடு பகுதியில் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியை வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன், சுருளி அருவிக்கு செல்ல பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர்.மூன்று கும்கிகள் வருகை: அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சியிலிருந்து சுயம்பு, முத்து என்ற 2 கும்கி யானைகள் கம்பத்திற்கு நேற்று வந்தன. தொடர்ந்து டாப்ஸ்லிப்பிலிருந்து உதயா என்ற கும்கி யானையும் கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கும்கி யானைகளும் கம்பம் – கூடலூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு புளியந்தோப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இந்த கும்கி யானைகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு, யானையை மடக்கும் பணிகள் குறித்து வனத்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
* ‘பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படும்’
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அரிசிக்கொம்பன் யானை தற்போது மக்கள் வசிக்கும் பகுதிகளில் இல்லை. கம்பம் சுருளிப்பட்டி அருகே மேகமலை வனப்பகுதியில் நடு ஆறு என்ற இடத்தில் யானை உள்ளது. யானை தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்ததில் இருந்தே வனத்துறையின் ஒரு சிறப்பு குழு யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. யானைக்கு துப்பாக்கி வழியாக மயக்க ஊசி செலுத்த கலைவாணன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த யானையை அமைதிப்படுத்தி தான் பிடிக்க முடியும். அதற்கான முழுவீச்சில் தமிழக வனத்துறை இறங்கியுள்ளது’’ என்றார்.
The post அரிசி கொம்பனை மடக்க கும்கிகள் கம்பம் வருகை: சுருளி அருவி பக்கம் மக்கள் ‘தலைகாட்ட’ தடை appeared first on Dinakaran.