கடன் வாங்குவதற்கு கட்டுப்பாடு கேரளாவின் வளர்ச்சியை முடக்க ஒன்றிய அரசு திட்டம்:முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

திருவனந்தபுரம்: கடன் வாங்குவதற்கு கட்டுப்பாடு ஏற்படுத்தியதின் மூலம் கேரள அரசின் வளர்ச்சியை முடக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறது என்று கண்ணூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். இந்த நிதியாண்டில் கேரளாவுக்கு ஒன்றிய அரசுரூ.32,500 கோடி கடன் வழங்க திட்டமிட்டிருந்தது. இதை ஒன்றிய அரசும் உறுதி செய்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட தொகையை விட பாதிக்கு மேல் குறைவாகரூ.15,390 கோடி மட்டுமே கடன் வழங்க முடியும் என்று திடீரென ஒன்றிய அரசு தெரிவித்தது. ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கேரள அரசுக்கு ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கேரள நிதியமைச்சர் பாலகோபால், முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரது சொந்த ஊரான பினராயியில் கள் இறக்கும் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: கேரள மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. கேரளாவுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தி, கடன் எல்லையை ஒன்றிய அரசு குறைத்ததின் மூலம் இது நிரூபணமாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post கடன் வாங்குவதற்கு கட்டுப்பாடு கேரளாவின் வளர்ச்சியை முடக்க ஒன்றிய அரசு திட்டம்:முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: