90 வயது ஆசிரியரிடம் அடிவாங்கி மகிழ்ந்த 60 வயது மாஜி மாணவர்கள்: வேதாரண்யத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1985-87ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவர்கள், 36 ஆண்டுகளுக்கு பின் நேற்று அதே பள்ளியில் சந்தித்துக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் தற்போது 60 வயது ஆகிறது. இவர்களில் பலர் காவல்துறை, ஆசிரியர், மருத்துவர், விஞ்ஞானி, பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கின்றனர். சிலர் தொழில் முனைவோர்களாக இருக்கின்றனர்.

இந்த சந்திப்பின்போது தங்களுக்கு பயிற்றுவித்த 8 ஆசிரியர்களையும் வரவழைத்து அவர்களுக்கு சால்வை மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தனர். அப்போது முன்னாள் மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து, ஆசிரியரை பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது ஆசிரியர் கையில் பிரம்பை (கம்பு) கொடுத்து, மாணவர்களாக இருந்தபோது தங்களை அடித்ததைப்போலவே இப்போதும் என்னை அடிங்க சார் என கையை நீட்டி ஒவ்வொருவராக அடி வாங்கி மகிழ்ந்தனர்.பின்னர் முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்தும், கட்டித்தழுவியும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். நிகழ்ச்சியில், திருச்சி, சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், மன்னார்குடி, நாகப்பட்டினம் மற்றும் கத்தார், அமெரிக்காவில் இருந்தும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களின் மகன், பேரன், பேத்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் முன்னாள் ஆசிரியர்களை, முன்னாள் மாணவர்கள் தங்கள் காரில் அவர்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்று விட்டு வந்தனர்.

The post 90 வயது ஆசிரியரிடம் அடிவாங்கி மகிழ்ந்த 60 வயது மாஜி மாணவர்கள்: வேதாரண்யத்தில் நெகிழ்ச்சி சம்பவம் appeared first on Dinakaran.

Related Stories: