வெளிநாடுகளுக்கு பறக்கிறது தேங்காய் ஓடு கலைப்பொருட்கள் கொட்டாங்குச்சிக்கு கொட்டுது துட்டு: தஞ்சை கலைஞரின் கை வண்ணத்துக்கு மவுசு

கல்லிலே கலை வண்ணம் கண்ட பெரிய கோயில், மன்னர்காலத்தை கண்முன் கொண்டு வரும் அரண்மனை வளாகம், தமிழரின் அறிவாற்றலை விளக்கும் சரஸ்வதி மகால் நூலகம், தமிழர்களின் கலைத்திறனை பறை சாற்றும் தஞ்சாவூர் ஓவியம் மற்றும் தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது தஞ்சாவூர். இந்த சிறப்புகளுடன் மேலும் ஒரு சிறப்பை சேர்த்து உள்ளார், 61 வயதான கைவினை கலைஞர். தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் குமரகுரு (61). கைவினை கலைஞர். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம். இதனால் அவர் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில், வணிக வரைகலை பயின்றிருக்கிறார். இவரது தந்தை நில அளவைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றிய நிலையில் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கருணை அடிப்படையில் அதே துறையில் குமரகுருவிற்கு 23 வய்தில் அரசு பணி கிடைத்தது. 30 ஆண்டுகள் அரசு பணி பார்த்த நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் குமரகுருவிற்கு ஏற்பட்டது. இதனால் அரசு வேலையில் இருந்துபோது அவர் தேர்வு செய்த பாதைதான் இந்த கைவினை பொருட்கள் தயாரிப்பது. அதையும் வித்தியாசமாக செய்ய முடிவு எடுத்து அதற்காக தேங்காய் ஓட்டை தேர்வு செய்தார். இத்தொழில் நன்றாக சென்றதால் அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, பல ஆண்டுகளாக தேங்காய் ஓட்டின் மூலம் பல்வேறு கைவினைப்பொருட்களை தயாரித்து வருகிறார். இதற்காக தேங்காய்களை மொத்தமாக சந்தைகளில் வாங்குகிறார். அதன் பருப்பை (ெகாப்பரை) பிரித்தெடுத்து செக்கில் எண்ணையாக அரைத்து, அந்த எண்ணெய்யை தான் தயாரிக்கும் பொருட்களை பாலிஸ் செய்ய பயன்படுத்துகிறார். தேங்காய் ஓடுகளை பாலிஷ் செய்து, கைவினை கலை பொருட்களுக்கு தேவையான பூ டிசைனை உருவாக்கி மனதில் தோன்றும் எண்ணத்தை வடிவமாக்கி கலைநயமிக்க பொருட்களை உருவாக்கி வருகிறார். தேங்காய் ஓடுகளை மட்டுமே கொண்டு அழகிய அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களான தேனீர் கப், ஜார், கரண்டி, பர்ஸ், கீ செயின் மற்றும் அலங்கார அணிகலன்களை உருவாக்குகிறார். இவருடைய கைவினை பொருட்கள் கடல் கடந்தும் பறக்கிறது. கனடா, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளுக்கும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறார். ஒன்றிய, மாநில அரசின் கைவினை பொருட்கள் கண்காட்சியிலும் இவருடைய கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் கைவினை கலைஞர் (தேங்காய் ஓடு கலைப் பொருட்கள்) அடையாள அட்டையும் இவர் பெற்றுள்ளார். முழுக்க முழுக்க இயற்கை முறையிலான பொருட்களைக் கொண்டு (தேங்காய் ஓடு, குச்சி) மட்டுமே, எந்தவிதமான ரசாயன பூச்சு இல்லாமல் கலைப் பொருட்களை தயாரிக்கிறார். இத்தொழிலில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட குமரகுரு ஒன்றிய, மாநில அரசுகள் மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 700 பேருக்கு கைவினை கலைப்பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளித்திருக்கிறார்.

இதுகுறித்து குமரகுரு கூறுகையில், ‘சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மீது உள்ள ஆர்வத்தால் அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சுயமாக கைவினை கலைப் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். புதுமையாக முயற்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வீணாகும் தேங்காய் ஓட்டிலிருந்து அழகிய கலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இந்த கொட்டாங்குச்சிகளை கொண்டு தேநீர் கப், ஊறுகாய் வைக்கும் ஜாடி, உப்பு ஜாடி, தாமரை பூத்த தடாகம், செல்போன் ஸ்டாண்ட், விநாயகர் சிலை, சிறிய பாத்திரம், அர்ச்சனை கூடை, தாமரை மற்றும் பறவைகள் வடிவில் அழகு சாதனை பொருட்கள், அப்துல் கலாம் உருவம் பொறிக்கப்பட்ட தடாகம் போன்றவற்றை செய்து வருகிறேன். தமிழகத்திலேயே முதல் முறையாக யாரும் செய்யாததை நான் செய்து வருகிறேன். திருமணம், திருவிழாக்கள் மற்றும் சுப முகூர்த்த நிகழ்ச்சிகளில் நான் செய்யும் கைவினைப் பொருட்கள் நினைவு பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் தேர்ந்தெடுக்கும் கைவினை பொருட்களில் 100 எண்ணிக்கையில் ஆர்டர் தந்தால் ஒரு வாரத்தில் பொருட்களை தயாரித்து தந்து விடுவேன். நான் உருவாக்கிய அப்துல் கலாம் உருவம் பொறிக்கப்பட்ட தடாகம், தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் அருங்காட்சியகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதைக்கண்டு என்னை தொடர்பு கொண்டு அவற்றை வாங்கி செல்கின்றனர். இப்பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் மாதம்ரூ.40,000 முதல்ரூ.50,000 வருவாய் கிடைக்கிறது’ என்றார்.

The post வெளிநாடுகளுக்கு பறக்கிறது தேங்காய் ஓடு கலைப்பொருட்கள் கொட்டாங்குச்சிக்கு கொட்டுது துட்டு: தஞ்சை கலைஞரின் கை வண்ணத்துக்கு மவுசு appeared first on Dinakaran.

Related Stories: