திருக்கழுக்குன்றம் அருகே ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்ற மக்கள் எதிர்ப்பு: தாசில்தார் வாகனத்தின்முன் படுத்து மறியல்

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா, சதுரங்கப்பட்டினம் கிராமத்துக்கு உட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தை, கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த 14 பேர் ஆக்கிரமித்து குடிசை வீடுகள் கட்டி வசித்து வந்துள்ளனர். இதனால் அந்த ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை அகற்ற வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் ஒருசிலர் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி தலைமையில் வருவாய் துறையினர், சதுரங்கப்பட்டினம் பகுதியில் உள்ள அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த குடிசை வீடுகளை அகற்ற வந்திருந்தனர். அப்போது, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தாசில்தாரின் வாகனத்துக்கு முன்பாக 50க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட மக்களிடம் தாசில்தார் ராஜேஸ்வரி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளில் நீண்ட காலமா வசித்து வருபவர்களுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க ஏற்பாடு செய்கிறேன். தற்போது ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற ஒத்துழைப்பு கொடுங்கள் என தாசில்தார் உறுதியளித்தார்.

தாசில்தாரின் உறுதியை ஏற்று, சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து அங்கு அரசு நிலத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் ஜெசிபி இயந்திரம் மூலமாக இடித்து அகற்றப்பட்டது.

The post திருக்கழுக்குன்றம் அருகே ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்ற மக்கள் எதிர்ப்பு: தாசில்தார் வாகனத்தின்முன் படுத்து மறியல் appeared first on Dinakaran.

Related Stories: