அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை நடந்தது: வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைவதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தாண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த 4ம்தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது. ஆனாலும், வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கடந்த சில நாட்களாக 104 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதைெயாட்டி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில் தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனிதநீர் இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் சிந்தியடி குளிர்விக்கப்படுகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நாளையுடன்(29ம் தேதி) நிறைவடைகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரவு 7 மணியளவில் முதல் காலம் 1,008 கலச பூஜை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, இன்று காலை 8.30 மணிக்கு 2வது கால கலச பூஜையும், மாலை 6.30 மணிக்கு 3வது கால கலச பூஜையும், நாளை காலை 7 மணிக்கு 4வது கால கலச பூஜையும் நடைபெறும். பின்னர், பகல் 11 மணிக்கு அண்ணாமலையாருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெறும்.அக்னி நட்சத்திர நிறைவாக, நாளை இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெறும். அக்னி நட்சத்திரம் சுட்டெரித்த நிலையிலும், அண்ணாமலையார் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெயில் சுட்டெரிப்பதால், கோயில் 3ம் பிரகாரத்தில் பக்தர்களுக்கு குளிர்ந்த மோர் வழங்கப்பட்டது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சாத்தப்படும் வேட்டி, சேலைகள் நேற்று பொது ஏலத்தில் விடப்பட்டது.3ம் பிரகாரத்தில் உள்ள கோயில் உள்துறை நிர்வாக அலுவலகத்தில் நடந்த இந்த ஏலத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனுக்கு சாத்தப்பட்ட வேட்டி, சேலைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

The post அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை நடந்தது: வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: