ஜல்லிக்கட்டு கோலாகலம்: 350 காளைகள் சீறிப்பாய்ந்தன

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே தும்பல்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை 150 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுக்குறிச்சி ஊராட்சி, தும்பல்பட்டி கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் கலந்துகொள்ள மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, தம்மம்பட்டி, சேலம், துறையூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 350க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளை அடக்குவதற்காக முள்ளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 150 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் உமா, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, ஆர்டிஓ சுகந்தி, தாசில்தார் சுரேஷ், பிடிஓ.,க்கள் சரவணன், பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டி துவங்கியதும் முதலில், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமியின் காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் தப்பிய காளைகளுக்கும் சில்வர் பாத்திரங்கள், பேன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்க, பெரிய அளவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், போட்டியில் காயம் அடைபவர்களுக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்க அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மருத்துவக்குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை, முள்ளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர். இதையொட்டி, ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ஜல்லிக்கட்டு கோலாகலம்: 350 காளைகள் சீறிப்பாய்ந்தன appeared first on Dinakaran.

Related Stories: