தொடர் மழையால் மகசூல் அதிகரிப்பு; மஞ்சூர் சுற்றுவட்டார தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து 2 மடங்கு உயர்வு

மஞ்சூர்: மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் தேயிலை மகசூல் அதிகரித்ததை தொடர்ந்து தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது. இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்டு களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளும் உள்ளது.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பரில் துவங்கி 5 மாதங்களுக்கும் மேலாக போதிய மழை பெய்யவில்லை. மேலும் பகல் நேரங்களில் சமவெளி பகுதிகளுக்கு இணையாக வெயில் சுட்டெரித்தது. இதனால் கடும் வறட்சி நிலவியது. மழை பெய்யாததாலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்ததால் தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து பலமடங்கு குறைந்து தேயிலைத்தூள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
பசுந்தேயிலை வரத்து குறைந்ததால் பெரும்பாலான தொழிற்சாலைகளில் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி பரவலாக நல்ல மழை பெய்தது.

வெயிலும், மழையுமாக தேயிலை விவசாயத்திற்கு ஏற்ற காலநிலை ஏற்பட்டதால் தேயிலை மகசூல் படிப்படியாக அதிகரித்தது. தற்போது மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தொழிற்சாலைகளுக்கு வெறும் 10 ஆயிரம் கிலோ முதல் 12 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து காணப்பட்ட நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து உள்ளது. பசுந்தேயிலை வரத்து 2 மடங்காக அதிகரித்துள்ளதால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது.

The post தொடர் மழையால் மகசூல் அதிகரிப்பு; மஞ்சூர் சுற்றுவட்டார தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து 2 மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: