வேலூர் சிறைகளில் நாள்தோறும் கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி: சிறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் சிறைகளில் நாள்தோறும் கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் சிறைக்குள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுதந்திரமாக உலா வர அனுமதிக்கப்படுகின்றனர். அந்த நேரத்தில் உடல் உழைப்பில் பலர் கவனம் செலுத்தி, சம்பளம் பெறுகின்றனர். இன்னும் சிலர் உடல் மற்றும் மனதை நல்வழிப்படுத்தும் பயிற்சிகளில் கவனம் செலுத்துகின்றனர். இந்நிலையில், சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ்பூஜாரி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் ஆய்வு செய்து, கைதிகளின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். அப்போது, கைதிகள் வாசிப்பு திறனை அதிகரிக்கும் புதிய புத்தகங்களை சிறையில் உள்ள நூலகத்திற்கு வாங்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடைபெற்ற புத்தக கண்காட்சி மற்றும் திருவிழாக்களில் சிறைகளில் நூலகம் அமைப்பதற்காக ‘கூண்டுக்குள் வானம்’ என்ற பெயரில் அரங்கம் அமைக்கப்பட்டு புத்தகம் தானமாக பெறப்பட்டது. இந்த கண்காட்சிகளின் மூலம் சிறை நூலகங்களுக்கு சுமார் 1 லட்சம் புத்தகங்கள் பொதுமக்கள், எழுத்தாளர்கள் தானமாக வழங்கினர். மேலும் கைதிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில், நூலகங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட ₹2.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளில் 87.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், சிறைகளில் உள்ள கைதிகளின் மன நலனிற்காக புத்தகம் வாசிப்பை தொடர்ந்து, உடல் நலனிற்காக விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தெரிவித்தார். இதைதொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து மத்திய சிறைகளில் கைதிகளின் விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டது.
அதன்படி, வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் கைதிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகளை டிஐஜி செந்தாமரைகண்ணன், கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தனர். இதில் ஆண்கள் மத்திய சிறையில் வாலிபால், இறகுப்பந்து, கேரம் போட்டிகளும், பெண்கள் சிறையில் கேரம், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றங்களை செய்து விட்டு சிறைக்கு வரும் கைதிகளுக்கு, சிறைக்குள் பல்வேறு தொழில் பயிற்சி வழங்கி, தண்டனை காலம் முடிந்து சிறையை விட்டு வெளியே வரும்போது, அவர்கள் தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகளும், கடனுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் கைதிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதற்காக மாலை நேரங்களில் கைதிகளுக்கு விருப்பமுள்ள வாலிபால், கேரம், இறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்றுவருகின்றனர். இது கைதிகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றனர்.

The post வேலூர் சிறைகளில் நாள்தோறும் கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி: சிறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: