ஆலப்புழாவில் மருந்து குடோனில் தீ விபத்து சதி செயலா என போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கொல்லம், திருவனந்தபுரத்தை தொடர்ந்து ஆலப்புழாவிலும் அரசு மருந்து குடோனில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. எனவே இது திட்டமிட்ட சதியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள உளியகோவில் பகுதியில் அரசு மருந்து குடோன் உள்ளது. கொல்லம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் இங்குதான் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதில் பல கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் தும்பா பகுதியிலுள்ள அரசு மருந்து குடோனிலும் தீப்பிடித்தது. இந்த சம்பவத்திலும் பல லட்சம் மதிப்புள்ள மருந்துகள் எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்தில் ஒரு தீயணைப்பு வீரரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஒட்டியுள்ள அரசு மருந்து குடோனிலும் திடீரென தீப்பிடித்தது. இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். இதையடுத்து குடோனில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை நீண்டநேரம் போராடி அணைத்தனர். இதனால் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்திலும் ஏராளமான மருந்துகள் எரிந்து போனதாக கூறப்படுகிறது. கேரளாவில் அடுத்தடுத்து அரசு மருந்து குடோன்களில் தீ பிடிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் மருந்து வாங்கியதில் கேரள அரசு ஊழல் செய்ததாகவும், அதை மறைப்பதற்காகவே மருந்து குடோன்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் கூறின. எனவே இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post ஆலப்புழாவில் மருந்து குடோனில் தீ விபத்து சதி செயலா என போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: