அண்ணாமலை பற்றி பேசியதால் வெளிநாட்டில் இருந்து என்னை மிரட்டுகிறார்கள்: போலீசில் நடிகர் எஸ்.வி.சேகர் புகார்

சென்னை: பாஜ தலைவர் அண்ணாமலை பற்றி பேசியதால் வெளிநாட்டில் இருந்து போன் மூலம் தன்னை மிரட்டுவதாக நடிகர் எஸ்வி சேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் எஸ்வி சேகர் சென்னை, மந்தைவெளியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். 2006 முதல் 2011ம் ஆண்டுகளில் அதிமுகவின் எம்எல்ஏவாக இருந்தார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். அதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கட்சி, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த எஸ்வி சேகர், அண்மையில் தமிழ்நாடு பாஜவிற்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலை தொடர்ந்து மீண்டும் அரசியல் பேசத் தொடங்கி இருக்கிறார்.

தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை மீது நேரடியாகவும் மறைமுகமாக டிவிட்டர், தொலைக்காட்சி, யூடியூப் சேனல் நேர்காணல்களிலும் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இந்த நிலையில்தான் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக எஸ்வி சேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கும் நடிகர் எஸ்வி சேகர், ‘தனக்கு தொலைபேசி மூலமாக வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது’ என்று தெரிவித்து உள்ளார்.

ராமலெட்சுமி என்பவர் வெளிநாட்டில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன் கர்நாடக தேர்தலில் தமிழ்நாடு பாஜ தலைவர்களின் பங்களிப்பு பற்றி ஊடகங்களில் பேசியதால் தனக்கு போன் மூலம் மிரட்டல் வருவதாக எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அண்ணாமலை பற்றி பேசியதால் வெளிநாட்டில் இருந்து என்னை மிரட்டுகிறார்கள்: போலீசில் நடிகர் எஸ்.வி.சேகர் புகார் appeared first on Dinakaran.

Related Stories: