விசாரணைக்கு அழைக்கும் நபர்களை போலீசார் துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை என்ற பெயரில் என்னை துன்புறுத்தக் கூடாது’ என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி பதில் அளித்தார். இதையடுத்து நீதிபதி, காவல்துறை விசாரணையில் தங்களை துன்புறுத்த கூடாது என்ற கோரிக்கையுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

பொதுவாக, காவல்துறை விசாரணையில் உயர் நீதிமன்றமும் தலையிடுவது இல்லை. விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் துன்புறுத்தப்பட்டதாக நீதிமன்ற கவனத்துக்கு கொண்டுவந்தால் நீதிமன்றம் கண்மூடி கொண்டிருக்காது. இந்த வழக்கை பொறுத்தவரை, விசாரணைக்கு மட்டுமே மனுதாரர் அழைக்கப்பட்டுள்ளதால் காவல்துறை விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. விசாரணைக்கு அழைப்பதற்கான சம்மன் எழுத்துப்பூர்வமாக அனுப்ப வேண்டும். விசாரணைக்கு ஆஜராகவேண்டிய தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். விசாரணை நடைமுறைகளை காவல் நிலையங்களில் உள்ள பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

The post விசாரணைக்கு அழைக்கும் நபர்களை போலீசார் துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: