இபிஎஸ்சுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ்சை சாட்சியாக விசாரிக்க வேண்டும்: சேலம் கோர்ட்டில் மனுதாரர் கோரிக்கை

சேலம்: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என சேலம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் 1வது நீதித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உண்மையான தகவல்களை தெரிவிக்கவில்லை. சொத்துக்கள், வருமானங்கள் ஆகியவற்றில் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதித்துறை நடுவர் கலைவாணி, சேலம் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை அறிக்கையை மே 26ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி நேற்றுமுன்தினம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், புகாருக்கான முகாந்திரம் இருப்பதால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர். இந்தநிலையில் புகார்தாரரான மிலானி, அந்த புகாரில் இன்னொரு தகவலையும் தெரிவித்துள்ளார். அதில், ஓ.பன்னீர்செல்வத்திடமும் சாட்சியாக விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். சேலம், இடைப்பாடி சார் பதிவாளர்கள், நாமக்கல், சென்னை பதிவாளர்கள், இடைப்பாடி கனரா வங்கி கிளை மேலாளர், சேலம் இந்தியன் வங்கி கிளை மேலாளர், இடைப்பாடி தாசில்தார், ஓ.பன்னீர்செல்வம், சேலம் வருமான வரித்துறை கமிஷனர் ஆகியோரை சாட்சியாக சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் மனுவில் கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவுடன் கட்சி பொதுச்செயலாளரின் அங்கீகார கடிதம் ஒன்றை கொடுக்க வேண்டும்.அப்போதுதான் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும். எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த அவரும் கையெழுத்து போட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது. அதிமுக கட்சி விதி 43ன் படி பொதுச்செயலாளர் தான் அங்கீகார கடிதம் கொடுக்க வேண்டும். அப்போது பொதுச்செயலாளர் பதவி இல்லை. ஆனால் இருவரும் தேர்தல் கமிஷனுக்கு கட்சியின் விதியை நாங்கள் மீறவில்லை என ஒரு பொய்யான தகவலை தெரிவித்துள்ளனர்.

அதேபோல் தவறான உறுதிமொழியையும் தேர்தல் கமிஷனுக்கு கொடுத்துள்ளனர். கட்சி பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என இருக்கிறது. எனவே தேர்தல் கமிஷனை ஏமாற்றி கடிதம் கொடுத்துள்ளனர். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டிக்க பட வேண்டிய குற்றம். இதில் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் மற்றொருவரான ஓ.பன்னீர்செல்வத்தை சாட்சியாக சேர்க்க வேண்டும் எனவும் மனுவில் அவர் கூறியிருக்கிறார்.

The post இபிஎஸ்சுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ்சை சாட்சியாக விசாரிக்க வேண்டும்: சேலம் கோர்ட்டில் மனுதாரர் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: