தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் தமிழ் வழி பாடங்களை நீக்கியது தவறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் யார் ஆலோசனையில் செயல்படுகிறார்? அமைச்சர் பொன்முடி ஆவேசம்

விழுப்புரம்: தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தமிழ்வழி பாடங்களை நீக்கியது தவறு? யார் ஆலோசனையின்பேரில் செயல்படுகிறார் என்று அமைச்சர் பொன்முடி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் தமிழ்வழி பாடப்பிரிவுகளை மாணவர் சேர்க்கையின்மையால் மூடுகிறோம் என்று 2 நாட்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் அல்லது அமைச்சராக இருக்கிற எனக்கோ எந்த அறிவிப்பும் இல்லாமல், எந்த செய்தியும் சொல்லாமல் அவர்களாகவே எடுத்த முடிவு. இதனை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. அரசுக்கே தெரியவில்லை. இந்த அறிவிப்பு மிகவும் மோசமானது என்று நான் சொன்னதற்குபிறகு, துணைவேந்தர் நேற்றைய தினம் திரும்ப பெறப்பட்டதாக அறிக்கை விட்டிருக்கிறார். இனிமேல் அப்படி நடக்காது, தமிழ்வழியில் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். யார் ஆலோசனையின்பேரில் இவர்கள் செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த ஆண்டு சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவு மட்டுமின்றி மற்ற பாடப்பிரிவுகளிலும் தமிழ்மொழியை புகுத்த வேண்டும். தமிழ்வழியிலே நடத்த வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. அதற்காக துணைவேந்தர்களையும், முதல்வர்களை அழைத்து பேசி முடிவு செய்திருக்கிறோம். இனி எந்த பாடங்களை துவக்குவதென்றாலும், நீக்கப் போவதென்றாலும் அரசின் செயலாளருக்கு அறிவித்தபிறகுதான் செயல்படுத்த வேண்டும் என்று முதலிலேயே அறிவித்திருக்கிறோம். அதற்காகத்தான் முதலமைச்சர் திறமையாக ஒரு சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்றினார். துணைவேந்தர்களை நியமிக்கிற அதிகாரம் மாநில அரசுக்கே வேண்டும். யாரோ சொல்வதையெல்லாம் துணைவேந்தர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இனிஇதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல், துணைவேந்தர்களும் சரிபடுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

* அண்ணாமலை என்னுடன் விவாதிக்க தயாரா?
அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘இருமொழி கொள்கைக்கு எதிராக, மூன்று மொழிக்கொள்கையை கொண்டுவருவதாக கூறுகிறது ஒன்றிய அரசு. இதனை அண்ணாமலை வரவேற்கிறாரா?. முதலில் அண்ணாமலை இதற்கு பதில் சொல்லட்டும். நேருக்குநேராக கூட வரச்சொல்லுங்கள், விவாதிக்கலாம். நான் தயாராக இருக்கிறேன். அவர் தயாராக இருக்கிறாரா. தமிழ் வழிக்கல்வி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று நான் எப்போது சொன்னேன். ஊடகத்தில் வருவதையும் சரியாக பார்ப்பதில்லை. வரலாறையும் சரியாக தெரிஞ்சிக்கிறதில்லை. கர்நாடகத்தில் இருந்துவிட்டு இங்கு வந்து கட்சி நடத்த வேண்டும் என்பதற்காக அரசியல் செய்வதற்காக இதை பேசுகிறாரா?. உண்மையிலே தமிழ்மீது அக்கறையா அவருக்கு அக்கறையிருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். தமிழ் மீது அக்கறை உள்ளவர்கள் திராவிட மாடல் ஆட்சிதான். தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் மக்களின் வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இருமொழிக்கொள்கையை ஆதரித்து தமிழும், ஆங்கிலமும் வேண்டும் என்று அண்ணாமலையை அறிக்கைவிடட்டும். மும்மொழிக்கொள்கையை மாற்ற என்ன செய்யப்போகிறார். அப்படி செய்தால் அவருக்கு தமிழ் மொழி மீது பற்று இருக்கிறது என்று கூறலாம்’ என்றார்.

The post தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் தமிழ் வழி பாடங்களை நீக்கியது தவறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் யார் ஆலோசனையில் செயல்படுகிறார்? அமைச்சர் பொன்முடி ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: