நபிகளார் வலியுறுத்திய நற்செயல்கள்

இஸ்லாமிய வாழ்வியல்

நபித்தோழர் முஆதுக்கு ஓர் ஆசை…

‘சொர்க்கத்தில் சேர்ப்பிக்கின்ற, நரகத்திலிருந்து விலக்கிவிடுகின்ற ஒரு நற்செயல் குறித்து நபிகளாரிடம் கேட்டால் என்ன?’ நல்வாய்ப்பாக இறைத்தூதருடன் ஒரு பயணத்தில் இருந்தார் முஆத். அப்போது முஆத், நபிகளாரை நோக்கி, “இறைத்தூதர் அவர்களே, என்னைச் சொர்க்கத்தில் சேர்ப்பிக்கின்ற, நரகத்திலிருந்து தொலைவில் ஆக்குகின்ற ஒரு நற்செயலை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு நபிகளார், “நீர் கேட்டிருப்பது சாதாரண கேள்வி அல்ல. மாபெரும் கோரிக்கை இது” என்று சொல்லிவிட்டு நற்செயல்களின் ஒரு பட்டியலையே சொல்லத் தொடங்கினார்.

“ஏக இறைவனை வழிபடு. அவனுக்கு எதையும் இணை வைக்காதே. தொழுகையை நிலைநிறுத்து. ஜகாத்தை வழங்கு. ரமலான் மாதம் நோன்பு வை. இறையில்லமாம் கஅபா சென்று வழிபாடு செய்.” பிறகு நபிகளார் முஆதை நோக்கி, “நன்மையின் வாசல்களை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?” என்று கேட்டுவிட்டு, “நோன்பு (பாவங்களைத் தடுக்கும்) கேடயமாகும். தண்ணீர் நெருப்பை அணைத்துவிடுவதைப் போல் தர்மம் பாவத்தை அழித்துவிடும்” என்றார்.

“உலகமே உறங்கிக்கொண்டிருக்கும் பின்னிரவு வேளையில் ஒருவர் எழுந்து இறைவனை வழிபடுவது மிகச் சிறந்த செயலாகும்” என்று கூறிய நபிகளார் பின்வரும் வேத வசனங்களை ஓதிக்காட்டினார்.

“அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் உயர்ந்துவிடுகின்றன. அச்சத்துடனும் ஆவலுடனும் தங்கள் இறைவனைப் பிரார்த்திக்கிறார்கள். மேலும் நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பவற் றிலிருந்து செலவும் செய்கிறார்கள். அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச்செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்.” (குர்ஆன் 32:16,17)

இந்த வசனங்களை ஓதிக்காட்டிய பிறகு மேலும் நபிகளார் முஆதை நோக்கி, “மார்க்கத்தின் தலையாகவும் தூணாகவும் சிகரமாகவும் இருக்கக்கூடிய ஒரு செயலை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு, “அதுதான் இறைவழியில் போராடுதல்” என்றார். பிறகு மீண்டும் அண்ணலார், “இந்த அனைத்து நற்செயல்களையும் ஒருங்கிணைக்கும் ஓர் உன்னத செயலை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா? என்று கேட்டார்.

“அறிவியுங்கள் இறைத்தூதர் அவர்களே” என்றார் முஆத். அப்போது நபிகளார் தம் நாவைப் பிடித்துக்காட்டி, “இதை உன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்” என்றார். முஆத் வியப்புடன், “இறைத்தூதர் அவர்களே, நாம் பேசும் பேச்சுக்காகவும் தண்டிக்கப்படுவோமா?” என்று கேட்டார். “முஆதே, உமது தாய் உம்மை இழக்கட்டும்” (இது அரபு மொழியின் மரபுத்தொடர். நாம் பேசும் போது “நாசமாப் போச்சு போ” என்று சொல்வது போல்) என்று கூறிய நபிகளார், “மக்கள் முகங்குப்புற நரகில் தள்ளப்படுவதற்குக் காரணமே அவர்களின் நாவு செய்த அறுவடையின் விளைவுதான்” என்று அறிவுறுத்தினார். (மிஷ்காத் நபிமொழி எண் 29, திர்மிதீ நபிமொழி எண் 2541)

இந்த ஒரே நபிமொழியில் அனைத்து நற்செயல்களையும் நபிகளார் பட்டியல் போட்டுச் சொல்லிவிட்டார். அது மட்டுமல்ல, தொழுகை, நோன்பு, பின்னிரவுத் தொழுகை, இறைவழியில் போராடுதல் போன்ற மிகப் பெரிய வழிபாடுகளைச் செய்திருந்தாலும் தம் நாவை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால் அத்தனையும் வீண் என்று முத்தாய்ப்பாக முடித்துள்ளார். நாவைப் பேணுவோம். நல்லறங்களில் ஈடுபடுவோம். அவற்றின் மூலம் சொர்க்கத்தை நெருக்கமாக்குவோம். நரகத்தைத் தொலைவாக்குவோம்.

– சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“செயல்களில் மிகச் சிறந்தது இறைவனுக்காக ஒருவரை நேசிப்பதும், இறைவனுக்காக ஒருவரை வெறுப்பதும் ஆகும்”. நபிமொழி

The post நபிகளார் வலியுறுத்திய நற்செயல்கள் appeared first on Dinakaran.

Related Stories: