மாணவர் சேர்க்கைக்கு 302 தனியார் பள்ளிகளில் குலுக்கல்

சேலம், மே 24: சேலம் மாவட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு 302 தனியார் பள்ளிகளில், பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் நடந்தது. நாடு முழுவதும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2019-ன்படி, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் கடந்த 2013-14 முதல் 2022-23ம் கல்வியாண்டு வரை, எல்கேஜி முதல் செயல்பட்டு வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பிலும், 1ம் வகுப்பு முதல் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 1ம் வகுப்பிலும் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

அதன்படி வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த மாதம் 20ம் தேதி முதல் இம்மாதம் 18ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் ஏராளமான பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை இத்திட்டத்தின் கீழ் சேர்க்க ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 334 சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இத்திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மாவட்டம் முழுவதிலும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்களது குழந்தைக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்ததில், 7,376 தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும், தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, அதற்கான காரணங்களுடன் இணையதளத்திலும், சம்மந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையிலும் கடந்த 21ம் தேதி வெளியிடப்பட்டது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை நடப்பாண்டு 334 பள்ளிகளில் உள்ள இடங்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், இதில், தகுதியற்ற விண்ணப்பங்களும் இருந்தன. குறிப்பாக, நடப்பாண்டிற்கு எல்கேஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2019 முதல் 31.07.2020 உள்ளாகவும், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2017 முதல் 31.07.2018 உள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும். ஆனால், இந்த காலத்தை தவிர்த்து பிற தேதிகளில் பிறந்திருந்த குழந்தைகள் பலருக்கும் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.இதுபோன்ற காரணங்களால், தகுதிவாய்ந்த 7,376 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டன. இவற்றில், 32 பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்குள் மட்டுமே விண்ணப்பங்கள் வந்தன. இதனால், அம்மாணவர்களுக்கு நேரடியாக சேர்க்கை வழங்கப்பட்டது.

அதேசமயம், 302 பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. இதற்காக சம்மந்தப்பட்ட பள்ளியில் நேற்று குலுக்கல் நடத்தப்பட்டது. அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக இருந்து, குலுக்கலை நடத்தினர். இதில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு பள்ளியின் எண்ணிக்கைக்கு ஏற்ப சேர்க்கை வழங்கப்பட்டது. சேலம் மரவனேரியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த குலுக்கலை, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) உதயகுமார் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது, சகாதேவபுரம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலாம்பிகை உடனிருந்தார். நேற்றைய குலுக்கலின் மூலம் மாணவர் சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளை வரும் 29ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாணவர் சேர்க்கைக்கு 302 தனியார் பள்ளிகளில் குலுக்கல் appeared first on Dinakaran.

Related Stories: