நாகர்கோவிலில் டெம்போக்களில் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படும் குப்பைகள்-வாகன ஓட்டிகள் கடும் அவதி

நாகர்கோவில் : நாகர்கோவிலில் திறந்த நிலையில் வாகனங்களில் குப்பைகள் கொண்டு செல்லப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது 52 வார்டுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் குறைந்த பட்சம் சுமார் 110 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

மக்கும் குப்பைகள் அனைத்தும் உரமாக்கப்படுகிறது. இதற்காக மாநகர பகுதியில் 11 இடங்களில் நுண் உரம் செயலாக்க மையம் செயல்படுகிறது. இது தவிர மக்காத குப்பைகள் அனைத்தும், வலம்புரி விளை உரக்கிடங்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாநகரில் குப்பைகள் சேகரிக்க மாநகராட்சி சார்பில் வாகனங்களும், தனியார் ஒப்பந்த வாகனங்களும் உள்ளன. தனியார் ஒப்பந்த வாகனங்களில், மாநகராட்சி பணிக்காக என எழுதப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

டெம்போக்களில் குப்பைகள் சேகரித்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு முன், வலை விரிக்கப்பட்டு தான் செல்ல வேண்டும். திறந்த நிலையில் குப்பைகளை கொண்டு செல்ல கூடாது என உத்தரவு உள்ளது. மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் ஆணையர் ஆனந்தமோகன் ஆகியோர் இதை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். ஆனாலும் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவு பொருட்களை கொண்டு செல்லும் வாகன டிரைவர்கள், பணியாளர்கள் சிலர் குப்பைகளை வலை விரித்து மூடுவது இல்லை.

இதனால் திறந்த நிலையில் குப்பைகள் கொண்டு செல்வதால், சாலையில் செல்ல கூடிய பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. குப்பைகள், கழிவுகள் சாலைகளில் விழுவதுடன், காற்றில் பறக்கும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக குப்பை வண்டிகளுக்கு பின்னால் பைக்கில் செல்பவர்களின் மேல் குப்பைகள் விழுகின்றன. இதனால் பெரும் சிரமத்துக்கு உள்ளாக வேண்டிய நிலை உள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் கொண்டு செல்லும் வாகனங்கள் முறைப்படி வலை விரித்து மூடி தான் குப்பைகளை கொண்டு செல்ல வேண்டும். டெம்போவில் தொட்டி நிரம்பி வழியும் நிலையில் குப்பைகளை கொண்டு செல்ல கூடாது என மேயர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post நாகர்கோவிலில் டெம்போக்களில் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படும் குப்பைகள்-வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: