அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் தமிழ்நாட்டில் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

சென்னை: ‘‘பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’’ என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கான கடந்த தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் முடிந்தது. அதற்கு பிறகு மே மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக 115 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் வர அச்சம் காட்டி வருகின்றனர். இது தவிர பெரும்பாலான மாணவ மாணவியர், பெற்றோர் விடுமுறைக்காக, தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.

சிலர் வெளி மாநிலங்களுக்கும் சென்றுள்ளனர். தொடர்ந்து கொளுத்தி வரும் கோடை வெயில் காரணமாக மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு திரும்புவதில் சிரமம் ஏற்படும் என்று பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஜூன் 1ம் தேதி 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவித்தோம். அதில் எந்தமாற்றமும் இல்லை. ஜூன் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசப்பாடப் புத்தகம், நோட்டு, சீருடைகள், உள்ளிட்ட பலவகை பொருட்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

The post அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் தமிழ்நாட்டில் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: