எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுகவினர் பேரணி: போக்குவரத்து நெரிசலில் திணறிய தென்சென்னை மக்கள்

சென்னை: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று காலை சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரிக்க வேண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த பேரணியால் தென் சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் அடுத்தடுத்து பலியான நிலையில், 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டது.

இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. விழுப்புரம் எஸ்பி நாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். செங்கல்பட்டு எஸ்பி உள்பட பலர் மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், கள்ளச்சாராய மரணத்திற்கு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக அதிமுக தலைமை கழகம் சார்பில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் பேரணியாக சென்று இன்று (22ம் தேதி) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று காலை 11.30 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டனர். இந்த பேரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகை அருகிலேயே அதிமுகவினர் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சிலர் மட்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, மனு அளித்தனர்.

முன்னதாக இன்று காலை 9 மணி முதலே அதிமுகவினர் ஏராளமானோர் சைதாப்பேட்டையில் குவிந்தனர். வெளியூரில் இருந்து வந்தவர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைத்து இருந்தனர். இதனால் சைதாப்பேட்டை – வேளச்சேரி, கிண்டி – சைதாப்பேட்டை, அடையாறு – கிண்டி ஆகிய சாலைகள் முழுவதும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி 11.30 மணிக்குதான் சைதாப்பேட்டை வந்தார். இதனால் சென்னை மக்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமான வெளியில் சென்னை மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியால் சென்னை மக்கள் மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் குறிப்பாக கொளுத்தும் வெயிலில் சிக்கி பாதிக்கப்பட்டனர்.

The post எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுகவினர் பேரணி: போக்குவரத்து நெரிசலில் திணறிய தென்சென்னை மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: