பாஜவின் துக்ளக் தர்பார் ஆட்சியில் ரூ.1,000 நோட்டுகள் மீண்டும் வரலாம்: ப.சிதம்பரம் கருத்து

காரைக்குடி: ‘ஒன்றிய பாஜ அரசின் துக்ளக் தர்பார் ஆட்சியில் மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரலாம்’ என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்குடியில் எம்பி அலுவலகத்தில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. முகாமை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். ராஜிவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டை விலக்கி கொள்கிறோம் என்று அரசு அறிவித்திருப்பது எனக்கு வியப்பளிக்கவில்லை. 500 ரூபாய் நோட்டு, ஆயிரம் ரூபாய் நோட்டில் கருப்பு பணத்தை பதுக்க முடியும் என்றால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்குவது மிக மிக சுலபம்.

அன்றே நாங்கள் இது குதர்க்கமான முடிவு, தவறான முடிவு என்று சொன்னோம். 2000 ரூபாய் நோட்டு மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள் கையில் தான் இருக்கிறது. 500 ரூபாய் தான் மக்கள் புழக்கத்தில் உள்ளது. ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் வியப்படையமாட்டேன். இது முழுக்க, முழுக்க சிந்திக்காமல் யோசிக்காமல் செய்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக செய்த முடிவு. மக்கள் ஏற்றுக் கொள்ளாத ரூபாய் நோட்டையெல்லாம் வெளியிடக்கூடாது. இப்போதாவது புத்தி வந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை விலக்கி கொண்டதற்கு மகிழ்ச்சி. ரூபாய் நோட்டுகளை செல்லும் என்பார்கள், செல்லாது என்பார்கள் ஏனெனில் இப்போது நடப்பது துக்ளக் தர்பார் ஆட்சி.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பாஜவின் துக்ளக் தர்பார் ஆட்சியில் ரூ.1,000 நோட்டுகள் மீண்டும் வரலாம்: ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: