சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய மால்கள் வரை ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதே நேரத்தில் நாளை முதல் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதனால் வீடு மற்றும் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், ரூ.2000 நோட்டுக்களை வைத்துள்ளவர்கள் வருகிற 23ம் தேதி முதல் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2000 நோட்டுக்களை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். அதேநேரத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட மறுநிமிடமே அனைத்து கடைகள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்க் மற்றும் வணிக நிறுவனங்களில் ரூ.2000 ேநாட்டுக்களை வாங்குவது இல்லை முடிஹவ செய்துள்ளனர். 2000 தவிர மற்ற ரூபாய் நோட்டுக்களை வைத்து பொருட்களை வாங்கி கொள்ளுங்கள் என்று கறாராக கூறி விட்டனர். இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
குறிப்பாக வியாபாரிகள் 2 ஆயிரம் நோட்டை கொண்டு வந்தால் பொருட்கள் தர மாட்டோம் என்று வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் சம்பவம் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். நீங்களே இப்படி சொன்னால் நாங்கள் எங்கே போய் நோட்டுக்களை மாற்றுவது என்று கடைக்காரர்களிடம் வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியும் பலனில்லை. உங்களிடம் ரூ.2000 நோட்டை வாங்கிவிட்டு நாங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். கடந்த காலத்தில் ரூபாய் பணமதிப்பிழப்பின் போது பட்டப்பாடு இன்னமும் எங்களால் மறக்க முடியவில்லை என்கின்றனர். இதனால், 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்ற முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலானவர்களின் வீடுகளில் அசைவ உணவு சமைப்பது வழக்கம். இதனால் மக்கள் மட்டன், சிக்கன் கடைகளை நாடுவது வழக்கம். ஆனால், இந்த இடங்களில் நேற்று 2 ஆயிரம் நோட்டுக்களை கடைக்காரர்கள் வாங்கவில்லை. இதனால், கடைகளுக்கு பொருட்களை வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய காட்சியை காண முடிந்தது. மேலும் பொழுதை போக்குவதற்காக ஷாப்பிங் மால்கள், தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். அங்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை மறுத்து விட்டனர். இதனால் அங்கு வந்தவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
அதே நேரத்தில் பணம் வைத்துள்ளவர்களின் கடைசி வாய்ப்பாக வங்கிகள் தான் உள்ளது. இதனால், அவர்கள் பணத்தை வாங்க வங்கிகளை நோக்கி கடந்த சனிக்கிழமை முதல் படையெடுக்க தொடங்கினர். வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கி கணக்கில் டெபாசிட் செய்தனர். இதனால், வரும் நாட்களில் வங்கிகளில் பணத்தை மாற்ற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நாளை(23ம் தேதி) முதல் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கூட்டத்தை சமாளிக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக ஒருவருக்கு ஒரே நேரத்தில் 10 நோட்டுக்களை அதாவது, ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வரிசையில் நின்று பணத்தை மாற்றும் வகையில் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். அதே நேரத்தில் வயதானவர்கள் நேரடியாக சென்று பணத்தை மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. மேலும் கூட்டம் அதிகரித்தால் வாடிக்கையாளர்கள் வசதிக்காக சாமியானா பந்தல் போடவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்தவித அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று வங்கி நிர்வாகங்கள் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ அடையாள ஆவணம் தரவோ வேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நோட்டுக்களை மாற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். அதனால், இன்று வங்கிகள் திறந்தவுடன் நிறைய வாடிக்கையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றவும், டெபாசிட் செய்யவும் வர வாய்ப்புள்ளது. இதனால், வங்கிகளில் கூட்டம் இன்று அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளிலும் ரூ.2,000 நோட்டுக்களை வாங்க மறுப்பு: பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.