v

வேலூர், மே 20: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன், வேலூர் சிறையில் பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட வழக்கில் நேற்று விடுவிக்கப்பட்டார். இதே வழக்கில் சிக்கிய மற்றொரு கைதியும் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் முருகன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். முருகன் ஜெயிலில் இருந்தபோது, கடந்த 2020ம் ஆண்டு அங்கு சோதனைக்கு வந்த பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக நடந்ததாக பாகாயம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவருடன் சேர்ந்து மற்றொரு கைதி கேப்ரியேல் என்பவரும் பெண் காவலரிடம் தகராறு செய்ததாக வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள ஜேஎம்4 கோர்ட்டில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக திருச்சியில் இருந்து பலத்த போலீஸ் காவலுடன் முருகன் வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு நேற்று மதியம் 2.30 மணியளவில் மாஜிஸ்திரேட் ரோஸ் கலா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அதேபோல் கேப்ரியேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரோஸ்கலா, போதிய ஆதாரங்கள் இல்லாததால் முருகன் மற்றும் கேப்ரியேல் ஆகிய 2 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பலத்த காவலுடன் திருச்சிக்கு போலீசார் முருகனை அழைத்து செல்ல இருந்த நிலையில், முருகன் வந்த வாகனம் பழுதானது. இதனால் முருகன் கோர்ட்டிலேயே காத்திருந்தார். தொடர்ந்து வாகனம் பழுது சரி செய்யப்பட்ட பின்னர் மாலை 6.40 மணியளவில் திருச்சிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

The post v appeared first on Dinakaran.

Related Stories: