மொபட் மீது பொக்லைன் மோதி தாய், மகள் பலி மகனுக்கு தீவிர சிகிச்சை தண்டராம்பட்டு அருகே மருத்துவமனைக்கு சென்றபோது

தண்டராம்பட்டு, மே 19: தண்டராம்பட்டு அருகே மருத்துவமனைக்கு சென்றபோது மொபட் மீது பொக்லைன் இயந்திரம் மோதிய விபத்தில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சேர்ப்பாப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வாக்கிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்(45), விவசாய கூலி தொழிலாளி. இவரது தாயார் மணியம்மாள்(65). இந்நிலையில், மணியம்மாளுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லையாம். எனவே, ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அசரம்பட்டு கிராமத்தில் வசிக்கும் மகள் சியாமளா(38) என்பவர் தாயை பார்க்க வாக்கிலாப்பட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து, நேற்று காலை உடல் நிலை பாதித்த மணியம்மாளை ராதாபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி, அன்பழகன் தனது தாய் மணியம்மாள் மற்றும் தங்கை சியாமளாவை மொபட்டில் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். பின்னர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராதாபுரம் அருகே 4 வழிச்சாலைக்கான தரைப்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வரும் இடத்தில், பின்னால் வந்த பொக்லைன் இயந்திரம் எதிர்பாராதவிதமாக இவர்களது மொபட் மீது மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த மணியம்மாள், சியாமளா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அன்பழகன் படுகாயம் அடைந்தார். அவ்வழியாக வந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து, படுகாயத்துடன் தவித்த அன்பழகனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வ விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணியம்மாள், சியாமளா சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய பொக்லைன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். பொக்லைன் இயந்திரம் மோதி தாய், மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மொபட் மீது பொக்லைன் மோதி தாய், மகள் பலி மகனுக்கு தீவிர சிகிச்சை தண்டராம்பட்டு அருகே மருத்துவமனைக்கு சென்றபோது appeared first on Dinakaran.

Related Stories: