திருப்பத்தூர் மாவட்டத்தில் அட்டகாசம்: 2 யானைகளை விரட்ட 3 கும்கிகள் வருகை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் 2 யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து 3 கும்கி யானைகள் இன்று வந்துள்ளன.
கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 ஆண் யானைகள் கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர்குப்பம், தண்ணீர்பந்தல் பகுதி வழியாக அங்குள்ள சரஸ்வதி ஆறு, ஜோலார்பேட்டை அருகே உள்ள திரியாலம் ஏரி ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்தன. இவற்றை வனத்துறையினர் 5 குழுக்களாக ஆங்காங்கே கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கருப்பனூர், அண்ணான்டப்பட்டி வழியாக பாச்சல் ஊராட்சி லட்சுமி நகரில் உள்ள ஏரியில் 2 யானைகளும் பல மணிநேரம் ஆனந்த குளியல்போட்டன. பின்னர் அங்கிருந்து குடியிருப்பு பகுதிகளான லட்சுமிநகர், அன்னை நகர், ஆசிரியர் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதி வழியாக திருப்பத்தூர் நகர எல்லைக்கு நேற்றிரவு சென்றன. நள்ளிரவு கருப்பனூர் வழியாக திருப்பத்தூர் பெரிய ஏரிப்பகுதி வழியாக வெங்களாபுரம், முத்தம்பட்டி பகுதிகளை கடந்து சவுடேகுப்பம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் முகாமிட்டது. யானைகளை விரட்ட திருப்பத்தூர் எல்லைப்பகுதியில் பல இடங்களில் நேற்றிரவு மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இன்று அதிகாலை முதல் திப்பசமுத்திரம் பகுதியில் யானைகள் அங்குள்ள விவசாய நிலத்தில் புகுந்தன.

இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் இந்த யானைகளை விரட்ட நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தில் இருந்து 3 கும்கி யானைகள் இன்று காலை வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை லாரிகள் மூலம் திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட வனப்பாதுகாப்பு அலுவலர் நாகா சதிஷ் கிடிஜாலா இன்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதுமலை சரணாலயத்தில் இருந்து காட்டு யானைகளை பிரத்யேகமாக அடக்கக்கூடிய 3 கும்கி யானைகளான சின்னதம்பி, வில்சன், உதயன் ஆகியவை வந்துள்ளன.

ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை சரணாலயம், ஓசூரில் உள்ள காவேரி சரணாலயம் ஆகிய இடங்களில் இருந்து ராஜேஷ் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் தற்போது திருப்பத்தூரில் சுற்றித்திரியும் 2 யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளனர். இன்றிரவுக்குள் 2 யானைகளுக்கும் மயக்க ஊசி செலுத்தி அதன்பின்னர் 3 கும்கிகள் மூலம் லாரிகளில் ஏற்றி முதுமலை சரணாலயத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உயிர் சேதம், பயிர் சேதம் இல்லை
திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளும் இதற்கு முன்பு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் 6 பேரை கொன்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 6 நாட்களாக முகாமிட்டுள்ள இந்த யானைகள், இதுவரை பெரிய அளவில் எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக தங்களின் அருகே வந்து அச்சுறுத்தும் இளைஞர்களை மட்டும் சில அடி தூரம் பிளிறியபடி விரட்டிவிட்டு சென்றுள்ளதே தவிர, யாரையும் பெரிய அளவில் தாக்கவில்லை. அதேபோல் கரும்பு, நெல் உள்ளிட்டவற்றை அதிகளவில் மிதித்து சேதப்படுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. தங்களுக்கு தேவையான அளவு உணவை சாப்பிட்டுவிட்டு அவை வனப்பகுதி வழியாக செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் அட்டகாசம்: 2 யானைகளை விரட்ட 3 கும்கிகள் வருகை appeared first on Dinakaran.

Related Stories: