திருப்பத்தூர் மாவட்டத்தில் 4வது நாளாக சுற்றித்திரியும் 2 யானைகளை சேலம், ஆந்திரா வனப்பகுதிக்குள் விரட்ட முடிவு: வனத்துறையினர் தகவல்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டத்தில் 4வது நாளாக சுற்றித்திரியும் 2 யானைகளை சேலம், ஆந்திரா வனப்பகுதிக்குள் விரட்ட முடிவு செய்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த 19 நாட்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 யானைகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு திருப்பத்தார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர் குப்பத்தில் தண்ணீர்பந்தல் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. மேலும் அப்பகுதியில் உள்ள சரஸ்வதி ஆறு மற்றும் திரியாலம் பகுதியில் உள்ள ஏரியில் முகாமிட்டிருந்த யானைகள், நேற்றுமுன்தினம் அதிகாலை முதல் குடியாணகுப்பம் வழியாக சோலையூர் ரயில்வே மேம்பாலம் சாலையை கடந்து சின்னக்கம்மியம்பட்டு, ரெட்டியூர் வழியாக சென்றது.

நேற்று முன்தினம் இரவு மலையடிவாரத்தில் உள்ள ஊசிநாட்டாண்வட்டம் பகுதியில் யானைகள் முகாமிட்டிருந்தது. அதன்பின்னர் அங்குள்ள பாரதகோயில் பகுதிக்கு வந்தது. அப்போது அங்கிருந்த இளைஞர்கள் யானைகள் மீது டார்ச்லைட் அடிப்பது, கற்களை வீசுவது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டனர். இதைக்கண்ட வனத்துறை அதிகாரிகள் அந்த இளைஞர்களை எச்சரித்து விரட்டினர். யானைகள் செல்லும் பாதையை தொடர்ந்து வனத்துறையினர் இரவு முழுவதும் கண்காணித்தனர். பின்னர் நள்ளிரவு அந்த யானைகள், எஸ்.கோடியூர் பகுதி ஏரிக்கரை சாலை வழியாக வக்கணம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, சக்கரகுப்பம் சார்பதிவாளர் அலுவலக பகுதியை கடந்தது. அப்போது, அந்த கிராம மக்களும் யானைகள் மீது கற்களை வீசி விரட்ட முயன்றனர். இதனால் யானைகள் கடும் ஆக்ரோஷத்துடன் சத்தமிட்டு பிளிறியது. வனப்பகுதிக்கு செல்ல வழிதெரியாமல் யானைகள் இரண்டும் தடுமாறியது.

இதைக்கண்ட வனத்துறையினர் உடனடியாக கிராம மக்களை மைக் மூலம் எச்சரித்தனர். இருப்பினும் அவற்றை கண்டு கொள்ளாமல் இளைஞர்கள் சிலர் யானைகளின் அருகே சென்று அவற்றை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடததிற்கு விரைந்து வந்து இளைஞர்களை எச்சரித்து விரட்டினர். இதனிடையே யானைகள் வனப்பகுதிக்குள் செல்வதற்கு ஏதுவாக மின்தடை ஏற்படுத்தினர். இதனால் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை ஊசிநாட்டாண்வட்டம், எஸ்.கோடியூர், சக்கரகுப்பம், வக்கணம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 யானைகளும் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமம், பால்நாங்குப்பம் பகுதி வழியாக டி.கே.வட்டம் பகுதியில் மலையடிவாரத்தில் முகாமிட்டது.

பின்னர் நேற்று மதியம் முதல் வெங்காயப்பள்ளி பகுதியின் ஏலகிரி மலை காட்டுப் பகுதியில் நடுப்பகுதியில் ஓய்வெடுத்து வருகிறது. இதுகுறித்து வன அலுவலர்கள் கூறுகையில், ‘ஜோலார்பேட்டை ஏலகிரி மலை அடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும். அவை வனப்பகுதிக்கு சென்றுவிடும்.

ஆனால் இளைஞர்கள் பலர் யானைகள் மீது கல் வீசுவது, அதனருகே சென்று கூச்சலிடுவது, டார்ச் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மைக் மூலம் எச்சரித்தாலும் பலர் கண்டுகொள்ளாமல் விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஆக்ரோஷத்துடன காணப்படுகிறது. மேலும் யானைகள் நாம் அனுப்பும் திசையை நோக்கி பயணிக்காது. அது எந்த திசையில் செல்கிறதோ அந்த திசையில் யானைகளை விரட்டவும், குறிப்பாக ஜோலார்பேட்டை பகுதிக்கு வந்தால் அவற்றை ஆந்திர எல்லை வனப்பகுதிக்கும், திருப்பத்தூர் பகுதியை நோக்கி வந்தால் அவற்றை சேலம் வனப்பகுதிக்கும் விரட்டியடிக்க திட்டமிட்டுளோம் என தெரிவித்தனர்.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் 4வது நாளாக சுற்றித்திரியும் 2 யானைகளை சேலம், ஆந்திரா வனப்பகுதிக்குள் விரட்ட முடிவு: வனத்துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: