திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம்: 30ம் தேதி தேரோட்டம்

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தனி சன்னதியில் சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று(16ம் தேதி) காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக கொடி எடுத்து வரப்பட்டது. இதைதொடர்ந்து கொடிமரத்து விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம், இளநீர், விபூதி, பழரசங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் வேதமந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடந்தது. தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி மற்றும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 24ம் தேதி இரவு செண்பக தியாகராஜ சுவாமி உன்மத்த நடனமாடி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளும் காட்சி, 28ம் தேதி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 30ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 31ம் தேதி தங்க காக வாகனத்தில் சனி பகவான் வீதியுலா, ஜூன் 1ம் தேதி தெப்போற்சவம் நடக்கிறது.

The post திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம்: 30ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: