புதுடெல்லி: துணை ஜனாதிபதி ஜெக்தீப் தங்கர் மற்றும் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ‘‘நாடாளுமன்றத்திற்கு இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீதித்துறை மதிக்க வேண்டும். அதில் தலையிடுவதற்கு நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை’’ என பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதேப்போன்று கொலிஜியம் முறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பேற்கும் முறை இல்லை. கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்படும் பெயர்களை மட்டுமே அரசு ஏற்க வேண்டும் என்றால், அதில் அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார். இவை இரண்டும் மிகப்பெரிய சர்ச்சையாக கிளம்பியது.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி மற்றும் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் ஆகிய இருவரின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியத்திற்கு எதிராக தொடர்ந்து சர்ச்சை பேச்சுக்களை பதிவிட்டு வரும் துணை குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் தெரிவித்த கருத்துக்கள் ஆகியவை சரியானதாகும். மேலும் அவர்கள் பேசியது சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தால் அதனை நாங்கள் பரிலீசித்து பார்த்துக்கொள்கிறோம். அதனால் இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post நீதித்துறை பற்றி விமர்சனம் துணை ஜனாதிபதி, சட்ட அமைச்சருக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி appeared first on Dinakaran.