முழு மதுவிலக்கு அறிவிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி பகுதியில் உள்ள மதுக்கடை மற்றும் குடிப்பழக்கத்தால் அப்பகுதியில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அனுபவித்து வரும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அங்கு மது குடிக்கும் குடிமகன்கள் போதையில் அருகில் உள்ள வீடுகளின் வாசல்களில் மயங்கி விழுந்து கிடப்பதும், அப்பகுதி வழியாக செல்லும் பெண்கள், மாணவ, மாணவியரிடம் தவறாக நடப்பதும் வாடிக்கையானதாகி விட்டன. இதை சகித்துக் கொள்ள முடியாமல் தான் பெண்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மதுவுக்கு எதிரான மக்களின் இந்த கோபத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தால் அது சட்டம், ஒழுங்கு சிக்கலாக மாறும் ஆபத்து உள்ளது. அதற்கு எந்த வகையிலும் தமிழ்நாடு அரசு இடம் கொடுத்து விடக் கூடாது. காரணைப் புதுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதுக்கடை மற்றும் குடிப்பகத்தை அரசு உடனடியாக மூட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும்.

The post முழு மதுவிலக்கு அறிவிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: